Monday, September 26, 2011

உன்னை நோக்கி















வானை நோக்கி வளரும் மரம் போல‌
உன்னை நோக்கி என் பயணம்.

எய்தவனை விடுத்து,
இலக்கை நோக்கி செல்லும் அம்பைப்போல
காரணம் அறியா உன் காதலை நோக்கி என் பயணம்.

ஒற்றைக்காலில் தவம் செய்யும் கொக்கின் இரையாய்
உன்னைச் சுற்றி நீந்தும் என் பயணம்.

நீரைத்தேடி நிலத்தைப் பிளக்கும்
வேரின் தாகத்தைப்போல‌
உன்னைத் துர‌த்தும் என் ப‌ய‌ண‌ம்.

சிப்பியைஅடைந்து முத்தாகும்
தூய‌ ம‌ழை துளிபோல‌
உன்னை தேடி என் ப‌ய‌ண‌ம்.

ப‌ய‌ண‌ம் எனதானாலும் பாதை நீ சொன்ன‌து
ப‌ய‌ணிக்கிறேன். என் த‌னித்த‌ ப‌ய‌ண‌த்தின் முடிவு
உன்னிட‌ம் சேருமென‌...

வெளிச்சப்புள்ளி
















நினைத்த பொழுதே நனைத்த
துயரம் நீ
உன் உண்மைகள்
உன்னைவிட மோசம்
நிலைப்பதில்லை,
விரைவில் பொய்துவிடுகிறது
உன்னை போல.

காற்றலையாய் கலைந்த
நிகழ்வுகளை
தேடினாலும் காலம்
மீண்டும் தருவதில்லை

வாழ்ந்த நாட்களைவிட
உன்னை நினைத்து
கரைந்த நிமிடங்களே அதிகம்.

என் இருட்டில் வெளிச்சப் புள்ளியாய் நீ
புள்ளியாய் மட்டுமே...

வீடு....



ஓடு நனையாத வீட்டில் ஒட்டடைப் பூச்சிகள்
அடுப்பு எரியாவிட்டாலும்
அதன் கதகதப்பில் பூனை

சின்னஞ்சிறு ரயில் வண்டிகளின் உரசல்
என் காலடியில் மரவட்டையின் ரூபமாக
சிந்திய சக்கரைத் துகள்களைத்
தேடி அலையும் எறும்புக் கூட்டம் ‍
என் மனம் சட்டைப் பையில்
சில்லரைகளைத் தேடி
அலைவது போல....

அடி சோற்றுப் பானையில்
வயிறு நிரம்பினர் பித்ருக்கள்
வழி வழியாய் வந்தோர்க்கு
என்ன செய்தோம் என்று எண்ணி
சோர்ந்து விழுந்த என் நினைவுகளில்
ஓர் ஆனந்தம்....

ஆம் என் வீடும் ஒரு சரணாலயம் தான் என்று.

Saturday, September 24, 2011

உடன்பிறப்பவள்...உயிரின் மறுபிறப்பவள்....


என் உறவாய் மலர்ந்த
உடன்பிறப்பவள்
என் உயின்
மறுபிறப்பவள்....

மலரிதழில் மழைத்துளியாய்
என்னை மண்ணில்
விழாமல் காப்பவள்...

பூவாசம் முள்ளிற்கும்
ஒட்டிக்கொள்வதுண்டு
எனக்காக முள்ளாய்
சில நேரம் நீ
மாறியதுமுண்டு....

விழியோரம் வழிந்திடும்
கண்ணீரும் உன்னால்
அன்பின் மழையாய்,
மகிழ்ச்சியின் சாரலாய்
கரைந்த்துண்டு...

நீ நீர் பூத்த நெருப்பாய்
நிலைத்திருக்கிறாய்
உன் கதகதப்பில் என்றும்
நான் குளிர்காய்வதற்கு....

கைக்கெட்டிய தூரத்தில்
வானவில்
நாம் கைகோர்த்த நேரத்தில்
சிரிக்கும்....

இனியும் நினைவில் வைப்பதற்கு
நிறைய நிஜங்கள்
காத்திருக்கின்றன...
வாழ்நாள் போதாது
உன் நிழலாய் நான் தொடர்வதற்கு....

Wednesday, September 21, 2011

அம்மா...


இந்த கவிதையை எனது தாய்க்கு சமர்பிக்கிறேன். இது எனது தாய்க்கு மட்டும் அல்ல உலகிலுள்ள அனைத்துத் தாய்மார்களுக்கும் பொருந்தும். அதனால் இக்கவிதை அவர்கள் எல்லாருக்கும் எனது சிறிய காணிக்கை.

அம்மா...

ஒரு வாய் சோற்றுக்கு
ஏங்கி நின்ற காலம் இல்லை
உன் சோற்றுக் கவளங்களையும்
சேர்த்துத்தந்தாய்....

சிட்டாடை கட்ட ஆசையில்லை
பட்டுப்பூச்சியிடம் இரக்கம் காட்ட
கற்றுத்தந்தாய்....

சிறு வயதில் கால் நடை பழக்கமில்லை
குதிரை சவாரியைவிட
உன் இடுப்பு சவாரி சுகமானது....

தங்கவளையல் தரமிழந்து போனது
உன் கண்ணாடி வளையலிடம்
போட்டிப்போட்டு....

உன்னிடத்து என் அன்பை வெளியிட
இச்சொல்லே போதும்
"என் அம்மா"....

என்னுள் ஆறறிவைத்தாண்டி
ஏழாம் அறிவாய் சுழலும்
உன் பாசம்...

என் கண்ணீர் தகுதியானது
உன்னை நினைக்கும்
பொழுது மட்டுமே....

நான் பிறந்த நாளைக்
கொண்டாடுகிறேன்
நீ உயிர்தெழுந்த நாளுக்காக....

நிழலாக போகும் நிஜம் நீ.
ஆனால் முடியவில்லை...
தொடர்கிறது...
ஒவ்வொரு உயிரிடத்தும் தாயன்பு....