Monday, December 29, 2014

காய்ச்சல்

காய்ச்சலில் என் உடல்
தகித்துக் கொண்டிருந்த போது
குளிர்ந்த நீரில்
மூழ்க வைத்தாய்
உடல் சூட்டைக் குறைக்கவே
அவ்வாறு செய்தாய் என
சமாதானப் படுதிக் கொண்டேன்
மார்கழிப் பனி வெளியில் கொட்ட
ஜலதோஷம் என் நாசியில் கொட்ட
எனக்குப் பிடிக்கும் எனச் சொல்லி
பனிக்கூழ் ஊட்டிவிட்டாய்
அதை உன் அன்பு என்றே
எண்ணியிருந்தேன்
வயிற்றுவலியில் படுத்திருக்க
சமைக்க வேண்டாம் என
கரிசனம் காட்டி பரோட்டா குருமா வாங்கி வந்தாய்
என் மீதான அக்கரை என்றே
இருமாந்தேன்
தூங்க முடியவில்லை
நீ வருந்துவாயே என
தூங்குவது போல நடித்திருந்தேன்
நீ மிகச் சரியாகக் (!) கேட்டுவிட்டாய்
நான் காய்ச்சல் வந்தது போல்
நடிக்கிறேன் என
இரண்டாம் முறையும் என்னை
சிலுவையில் அறைய
துரு ஏறிய ஆணிகளை வைத்துக் கொண்டு
என்னை சுத்தியல் தேடச் சொல்கிறாய்
அதையும் உனக்காகவே தேடிக் கொண்டிருக்கிறேன்
உனைப்பற்றிய உன்மைகள்
உரைத்த போதும்
நான் நம்ப விரும்பவில்லை...
இதைப் படிக்காமலேயே
அடுத்த கேள்வியும் கேட்பாய்
கவிதை எழுத முடிந்த உனக்கு காய்ச்சலா? என்று
பி(ப)டிக்காத உனக்கு விளக்கம் சொல்லிப் பயனில்லை
கவிதை உடல் சார்ந்ததல்ல
மனம் சார்ந்த ஒன்று என்று ...

Monday, November 3, 2014

அன்பைத் தேடி













கடற்கரை மணலில் தொலைந்து போன பாதச் சுவடுகளாய்
இப்போது நாமிருவரும்
கிடைக்க நேரமின்றி தவிக்கும் மணிமுள்ளாய்
ஓடிக்கொண்டிருந்தாலும்
மனச்சுவரின் கிறுகலில் நம் பெயர்
பொறித்திருக்கிறது எப்போதும்.
நிலத்தில் விழுந்த மழைத் துளியைத் தேடி
தாகம் தனிக்க எண்ணுவது போல்
நாம் தேடுகிறோம் வாழ்க்கையை.
கிடைத்த போழுது கைக்குள் பொத்திவைக்கத்
தவறிய பனித்துளியை
காய்ந்த நிலத்திற்கு உயிராகவேனும் விட்டுவிடு
நிலமாவது தாகம் தனிக்கட்டும்.
காய்ந்த கடற்கரையாய் நான் இருந்துவிட்டு போகிறேன்
வாழ்வை விதி குடிக்கும் வரைக்கும்.

Tuesday, September 9, 2014

கேள்வியும் நீ பதிலும் நீ















இமையோரம் காத்திருக்கும் கண்ணீர் துளி
துடைக்கப்படாமல் இருக்கிறது உன் கைகளுக்காக.
நீர் நிரம்பிய கண்களுக்கு தெரியவில்லை
நீ வருகிறாயா திரும்பிச் செல்கிறாயா என.
கற்றுக்கொண்டு விட்டது சிந்தாமலும் சிதறாமலும்
உனக்காக தவமிருக்க என் கண்ணீர் துளிகள்
உன் காலுக்கடியில் இருக்கும் புல்லாய் பார்க்கபடுகிறேன்
ஆனால் என்னுள்ளோ நெருஞ்சி முள்ளாய் குத்தப்படுகிறேன்
விடை தெரியா கேள்விகள் பலவாயினும்
என்னுள் எழுந்த பெரிய கேள்வி நீ
பதிலும் நீ.
நீண்ட இடைவெளிவிட்டு நடக்க பழகிக்கொண்டோம்
தண்டவாளம் போல் ஒன்றாக செல்ல அல்ல
கடைசி வரியில் காணாமல் போன எழுத்துக்களாய்….


Thursday, September 4, 2014

அச்சிடப்படாத வாழ்க்கை:













மனது பறக்கிறது லேசாகிறது கனக்கிறது துவள்கிறது
கணப்போழுதில் இத்தனையும் உன்னாலே.
சந்தோஷமும் சோகமும் ஏக்கமும் கலந்த உன் நினைவுகளை
 நான் என்செய்வேன்.
எழுதப்படாத கவிதைகளை நினைத்து ஏங்குகிற
கவிஞன் போல் ஏங்கி சாகிறேன் தினமும்.
நிலை தடுமாறிய பேனா முள்ளாய் நெஞ்சம்
காகிததில் ஒட்ட வைக்க பார்க்கிறேன் வார்த்தைகளை.
அச்சிடப்படாத அவ்வார்த்தைகளை கோர்த்து காத்திருக்கிறேன்
என்றேனும் நம் வாழ்கை என்னும் புத்தகத்தில் அச்சிடுவாய் என…

Wednesday, August 27, 2014

நீ என்னும் நிஜம் வேண்டும்



















ஒரு முறை ஒரே ஒரு முறை
உன் தோளில் சாய்ந்து அழுவதற்கு அனுமதி கொடு.
என் கண்ணீர் வற்றும் வரை அல்ல
என் சோகங்கள்  கரையும் வரை
வேண்டும் உன் தோழமை நிறைந்த உன் தோள்கள்.
வெட்டி எறிந்தாலும் வேர்விட்டு கிளம்பி
நெருஞ்சி முள்ளாய் கிழிக்கும் நிஜங்களை
சில நிமிடங்கள் உன் நிழலில் தள்ளிவிட்டு
இளைப்பாருகிறேன் கணவிலேனும்.
உன்னிடம் சில நிமிடங்கள்
என்னிடம் சில நிமிடங்கள்
இருந்துவிட்டு போகட்டும் காயங்கள்
நம் இருவரையும் ஒரே கோட்டில் சேர்க்க.
நியாயத்தின் வெடிப்பில் பூக்கும் நிம்மதி வேண்டும்
பொய்யாய் மகிழ்ந்து பொய்யாய் நெகிழ்ந்த
தருணங்களை புதைக்கும் நிஜம் வேண்டும்.
ஒரு முறை ஒரே ஒரு முறையேனும்
உண்மையாய் வாழ வேண்டும்.
நீ வேண்டும்
நீ என்ற நிஜம் வேண்டும். 

Thursday, March 20, 2014

விடுதலை



                எனக்கென்ற வாசலை இன்னும் திறக்கவில்லை நான்
            இந்த இருட்டில் எந்த வாசலை நோக்கி அடியெடுத்துவைப்பது?
                          புரியாத தவிப்பில் மூச்சு முட்டி
                        இறக்க நேரிட்டாலும் பரவாயில்லை
                        ஆனால் கண் இருந்தும் குருடனாய்
                திசை தெரியாமல் சுற்றி வருகிறேன் முடிவில்லாமல்.
                        திறந்த ஜென்னலையும் மூடிவிட்டு.


Wednesday, March 19, 2014

பெண் எனும் புத்தகம்:













திறந்த புத்தகமாய் இருக்க சுவாரஸ்யமற்றாவள்
அதனாலேயே மூடிய புத்தகமாய் இருந்தேன்
யாரும் படிக்காத புதிய புத்தகமாய் கிடந்தேன்.
யாரோ என்னை தூசிதட்டிவிட்டது போல் உணர்ந்தேன்
என் மன இலைகளில் மழை துளிகளால் கழுவப்பட்டேன்.
இளம் வெய்யிலின் சூட்டில் துளிர் விடுவது போல்
உன் அன்பில் குளிர் காய்கிறேன்.
நீல வானில் பறக்கும் பறவைக் கூட்டத்தில்
உன் எழுத்துக்களை படிக்கிறேன்.
படித்து முடித்தும் முடியாமல்
தொடர்கிறது எழுத்துக்கள்
கடைசி நிமிட பயணம் போல
ஆர்பரிக்கிறது மனம்
நிறைந்த பெளர்ணமியில்
அலைகளின் கால் பதித்த ஞாபகம்
உன் நினைவுப் பக்கங்கள் பறந்தோடி,
கலைந்து கிடக்கிறேன் நீ சேர்ப்பாய் என.

Saturday, March 15, 2014

மழைதுளியாய் நான்













கண்ணாடி திரையில் மழை துளியாய் விழுந்தேன்.
காற்று என்னும் விதி வழியே ஊந்துதலால் நழுவ
என் வழியில் சில துளிகளின் சந்திப்பு
பெருக்கெடுத்தது என் துளி நீர் உதவிய துளிகளின் வாயிலாக
அவர்களால் நான் பெருக பெருக பயணமானேன்
என் இலக்கு நோக்கி.
நன்றி உரைக்க திரும்பிப் பார்க்கையில்
எதோ ஒரு புதிய பனிதுளிக்கு வழியாகி கொண்டிருந்தது 
என் வழித்தடம்.