Saturday, September 30, 2023

வன வாசம்


பதினான்கு வருட வனவாசம் முடிந்தாயிற்று 

ஆனாலும் இன்னும் வனம் தான் எனை விடவில்லை 

வனம் விட்டு வரா வனவாச வாழ்க்கையில் 

சிறு பூக்கள் எனை சிறைப்படுத்துவதேன்... 

நொருங்கி விட்ட காய்ந்த இலையாய் 

சிறகிழந்த சருகாய்  மனம் வனம் சுற்றி வரும் என்னாளும்.

நூல் சிக்கல்கள்


 

Tuesday, August 30, 2022

தொடரும் செல்லங்கள்





நான் எங்கு சென்றாலும் என் முன்னே 
பின்னே தொடரும் நாய் குட்டியாய்
என் மீது படரும் முல்லை கொடியாய்
உன் ரீங்காரத்தில் என் தூக்கம் கலைத்தாய்
உன் நண்பர்களிடமும் என்னைப் பற்றி உரைத்தாய் 
என் மீது மோதி மெத்தேன்ற 
என் செல்ல அடியில் 
பொத்தென்று நீ விழ 
கைதட்டிய பாராட்டாய் எண்ணி 
உன் இனம் எனை நோக்கி ஆவலாய் படர... உன்னை தொடரவே அனுப்பி வைத்தேன். 
உன் இறப்புக்கு என் ஆழ்ந்த இரங்கல் 
ஓ... எனதருமை கொசுவே...!
 

Friday, November 19, 2021

அம்மா


 என் திசையாவும் உன்னில் முடியும்

என் விழியோர பார்வை கூட உன்னை தேடும்

என் வழியாவும் உன்னை வந்து சேரும்

என் வருங்காலம் உன்னில் துவங்கும்

மனம் ஏங்கும் முப்பொழுதும் 

இமைக்கும் நொடி கூட பிரியா வரம் வேண்டும்! 

என் பிறப்பினூடே உன் மறுபிறப்பு பெற்றவள். உன் உடல் ஒட்டி வளர்ந்தேன். உன் உயிர் பற்றி கிடந்தேன். விதி பற்றி செல்லும் வாழ்க்கையில் உன் ஓர் விரல் பற்றி சொல்லும் வழி வேண்டும் அவ்வளவே! 

இன்று அன்னையானவள் சேயானாள். பற்கள் அற்ற வார்த்தைகளில் மழலை மொழி கற்றேன். 

உன் சேயாய் துவங்கிய என் வாழ்வில் ஓர் அழகிய பிறழ்வு... 

நான் இன்று தாயானேன் உனை சீராட்டி தாங்கும் தருணத்திற்காகவே...! 




Monday, May 20, 2019

வெப்பம்




வெட்டப்பட்ட மரங்களின்
பெருமூச்சுதான் அனல் காற்றாய்
நமை எரிப்பது

காய்ந்த குளங்களில் மடியில் மடிந்திருக்கும் மீனின் உடலை புழுதிக்காற்று அடக்கம் செய்தது.

கோடை காலங்கள்  நன்கொடையாகமல்
பறவைகளின் தீப்பிடித்த இறகுகளில் நாம் எரித்தெறிந்த தீக்குச்சிகளின் பங்கும் ஒட்டியுள்ளன

வீட்டிற்கொர் மரம் வளர்க்கும்
திட்டம் மறக்கப்பட்டு
வீட்டிலுள்ளோர் மரமாயினர்
தேக்கு, சந்தன, செம்மரங்களாய் சிலையாயினர்...

தட்டுகள் தங்கமாய் மின்னாவிடினும்
அதற்கான நோக்கம் அழியாமல் இருக்கட்டும்

விவசாயிகளின் கண்களில் மட்டும்
பெய்யும் மழை
இனியேனும் வானில் இருந்து
பொழியட்டும்

Tuesday, May 14, 2019




சிலந்தி:

அழகாய் நூல் சற்றுகிறாய்...
சிறு பூச்சிகளை தேடி அலையாமல்
தானாக வந்து விழ,
அலங்கார தோரணம் கட்டுகிறாய்...
விழுந்தவைகளை உடனே பருகாமல் சிலகாலம் துடிக்கவிட்டு
அடங்கும் நேரம் நிதானமாய் விழுங்குகிறாய் மொத்தமாக...
சாகப்போவது அறியாமல் சிறு உயிர்கள் ஊஞ்சலாடுகிறது உன் எச்சில் இழையில்...!