Showing posts with label காதல் கவிதைகள். Show all posts
Showing posts with label காதல் கவிதைகள். Show all posts

Wednesday, October 25, 2023

நட்சத்திர புள்ளி




நட்சத்திரங்கள் யாருடைய 
ஆசைகளின் முற்றுப் புள்ளிகள்...?
புள்ளிகளின் வழியே
கோலமென வளைகிறது 
வாழ்க்கை...! 

Friday, October 5, 2018

இலையுதிர் காலம்


பூக்களிடத்திலும் சொல்லவில்லை 
என் மனக்கேதங்களை.
பின் எவ்வாறு தெரிந்தன  

வண்ணங்கள் மாறாவிடினும் 
இலைகளை பிரிந்து உதிந்தன 
என் மனப்பிளவை ஒத்தவாரு...?

வாசனையற்ற பூக்களாய் தெருவோரம் உதிர்ந்து, 
வண்ணங்கள் இழக்கும் தருவாயில்.... 
எதற்கும் இருக்கட்டும் என 
எதற்கு மாலை தொடுற்கிறாய்...?

உதிர்ந்த பூக்கள் மீண்டும் மரங்களில் சேர்வதில்லை. 
இலையுதிர் காலம் வரை காத்திருக்கின்றன. 
இலைகளுக்கும் பூக்களின் வலி புரியும் வரை.

Friday, September 30, 2016

முடியும் நிமிடங்கள்














முடிந்துவிட போகிறது
உனக்கும் எனக்குமான நிமிடங்கள்
தக்கவைத்துக்கொள்ள முயலவில்லை
கலையட்டும்.

இனி எல்லாம் நான் நானாக
நான் மட்டுமே உள்ள நினைவுகளை 
சுமக்க நினைக்கிறேன்.

உன்னை போல் சேர்ந்த வெற்றுச்சுமைகளை
அந்த சிவப்புக் கட்டிடதிற்குள் 
புதைக்க விழைகிறேன்.  

கிழிந்த உன் முகத்திரையில்
ஒளிர்ந்தது என் உள்முகம்
உணர்ந்த ஒர் நிமிடம் புரிந்தது
இனி என் இடம் இதுவல்லவென... 

நிலம் பார்த்து கரம் பிடித்தவள்          
இன்று நானிலம் பார்க்க வெளிச்செல்கிறேன்..! 

Wednesday, March 4, 2015

துரோக வலி











வெளியேற்ற நினைக்கும் எச்சிலை விழுங்குவது போல்
மன்னிக்கிறேன் உன் தவறுகளை.
அமிலமாக என்னை கரைக்கிறது
நான் உள்ளுக்குள் உருகினாலும்
இதயம் மட்டும் ஏனோ உனக்காக
துடிக்க எஞ்சிக்கிடக்கிறது
தவறுகளின் மூலம் நீ
தண்டனை மட்டும் ஏனோ
எனக்கே அளிக்கப்படுகிறது எப்போதும்
கட உள் என மனதை கட்டுப்படுத்தினாலும்
கடவுளுக்கும் கலங்கா உன் துரோகங்களை
கடந்து செல்ல முடியவில்லை
பிரிய துடிக்கும் சிறகுகளின் அடக்கப்பட்ட வலி
துரோக வலியைவிட குறைவுதான் என
நீண்டு கிடக்கிறது மரண வலிகள் மனமேங்கும்.
கடைந்தேடுக்கும் துயரங்களின் மிச்சத்திலிருந்து
வலிகள் விடுபட வெளியேறுமோ என வாழ்க்கை.

Sunday, January 18, 2015

துரோகி உனக்காக




துரோகக் களிப்பில் நீ கொடுக்கும் முத்தம்
         என் உதடுகளை எரிக்கின்றது
மனைவி என்ற அந்தஸ்திலிருந்து இரங்கி
         உன் தவறுகளுக்கேல்லாம் என்னை சாட்சியாய்
நிற்கும் பொம்மையாக்கினாய்.
         முன்பு உன் சிறு சபரிசத்தில் பூத்த என் உணர்வுகள்
இன்று உன் தொடுதலில் கருக செய்கிறது.
         உன் புண்ணகையின் விஷமத்தனத்தை புரிந்தபோது
நீ கிஷ்ணனாக இல்லை ராவணனாக தோன்றினாய்.
         கண்மூடி தியானிக்க நான் ஞானியல்ல
கண்ணிருந்தும் உன்னால் பார்வையிழந்த
         விட்டில் பூச்சியானேன் 
                        உன் பின்னால் செல்ல.....

Monday, December 29, 2014

காய்ச்சல்

காய்ச்சலில் என் உடல்
தகித்துக் கொண்டிருந்த போது
குளிர்ந்த நீரில்
மூழ்க வைத்தாய்
உடல் சூட்டைக் குறைக்கவே
அவ்வாறு செய்தாய் என
சமாதானப் படுதிக் கொண்டேன்
மார்கழிப் பனி வெளியில் கொட்ட
ஜலதோஷம் என் நாசியில் கொட்ட
எனக்குப் பிடிக்கும் எனச் சொல்லி
பனிக்கூழ் ஊட்டிவிட்டாய்
அதை உன் அன்பு என்றே
எண்ணியிருந்தேன்
வயிற்றுவலியில் படுத்திருக்க
சமைக்க வேண்டாம் என
கரிசனம் காட்டி பரோட்டா குருமா வாங்கி வந்தாய்
என் மீதான அக்கரை என்றே
இருமாந்தேன்
தூங்க முடியவில்லை
நீ வருந்துவாயே என
தூங்குவது போல நடித்திருந்தேன்
நீ மிகச் சரியாகக் (!) கேட்டுவிட்டாய்
நான் காய்ச்சல் வந்தது போல்
நடிக்கிறேன் என
இரண்டாம் முறையும் என்னை
சிலுவையில் அறைய
துரு ஏறிய ஆணிகளை வைத்துக் கொண்டு
என்னை சுத்தியல் தேடச் சொல்கிறாய்
அதையும் உனக்காகவே தேடிக் கொண்டிருக்கிறேன்
உனைப்பற்றிய உன்மைகள்
உரைத்த போதும்
நான் நம்ப விரும்பவில்லை...
இதைப் படிக்காமலேயே
அடுத்த கேள்வியும் கேட்பாய்
கவிதை எழுத முடிந்த உனக்கு காய்ச்சலா? என்று
பி(ப)டிக்காத உனக்கு விளக்கம் சொல்லிப் பயனில்லை
கவிதை உடல் சார்ந்ததல்ல
மனம் சார்ந்த ஒன்று என்று ...

Monday, November 3, 2014

அன்பைத் தேடி













கடற்கரை மணலில் தொலைந்து போன பாதச் சுவடுகளாய்
இப்போது நாமிருவரும்
கிடைக்க நேரமின்றி தவிக்கும் மணிமுள்ளாய்
ஓடிக்கொண்டிருந்தாலும்
மனச்சுவரின் கிறுகலில் நம் பெயர்
பொறித்திருக்கிறது எப்போதும்.
நிலத்தில் விழுந்த மழைத் துளியைத் தேடி
தாகம் தனிக்க எண்ணுவது போல்
நாம் தேடுகிறோம் வாழ்க்கையை.
கிடைத்த போழுது கைக்குள் பொத்திவைக்கத்
தவறிய பனித்துளியை
காய்ந்த நிலத்திற்கு உயிராகவேனும் விட்டுவிடு
நிலமாவது தாகம் தனிக்கட்டும்.
காய்ந்த கடற்கரையாய் நான் இருந்துவிட்டு போகிறேன்
வாழ்வை விதி குடிக்கும் வரைக்கும்.

Tuesday, September 9, 2014

கேள்வியும் நீ பதிலும் நீ















இமையோரம் காத்திருக்கும் கண்ணீர் துளி
துடைக்கப்படாமல் இருக்கிறது உன் கைகளுக்காக.
நீர் நிரம்பிய கண்களுக்கு தெரியவில்லை
நீ வருகிறாயா திரும்பிச் செல்கிறாயா என.
கற்றுக்கொண்டு விட்டது சிந்தாமலும் சிதறாமலும்
உனக்காக தவமிருக்க என் கண்ணீர் துளிகள்
உன் காலுக்கடியில் இருக்கும் புல்லாய் பார்க்கபடுகிறேன்
ஆனால் என்னுள்ளோ நெருஞ்சி முள்ளாய் குத்தப்படுகிறேன்
விடை தெரியா கேள்விகள் பலவாயினும்
என்னுள் எழுந்த பெரிய கேள்வி நீ
பதிலும் நீ.
நீண்ட இடைவெளிவிட்டு நடக்க பழகிக்கொண்டோம்
தண்டவாளம் போல் ஒன்றாக செல்ல அல்ல
கடைசி வரியில் காணாமல் போன எழுத்துக்களாய்….


Thursday, September 4, 2014

அச்சிடப்படாத வாழ்க்கை:













மனது பறக்கிறது லேசாகிறது கனக்கிறது துவள்கிறது
கணப்போழுதில் இத்தனையும் உன்னாலே.
சந்தோஷமும் சோகமும் ஏக்கமும் கலந்த உன் நினைவுகளை
 நான் என்செய்வேன்.
எழுதப்படாத கவிதைகளை நினைத்து ஏங்குகிற
கவிஞன் போல் ஏங்கி சாகிறேன் தினமும்.
நிலை தடுமாறிய பேனா முள்ளாய் நெஞ்சம்
காகிததில் ஒட்ட வைக்க பார்க்கிறேன் வார்த்தைகளை.
அச்சிடப்படாத அவ்வார்த்தைகளை கோர்த்து காத்திருக்கிறேன்
என்றேனும் நம் வாழ்கை என்னும் புத்தகத்தில் அச்சிடுவாய் என…

Wednesday, August 27, 2014

நீ என்னும் நிஜம் வேண்டும்



















ஒரு முறை ஒரே ஒரு முறை
உன் தோளில் சாய்ந்து அழுவதற்கு அனுமதி கொடு.
என் கண்ணீர் வற்றும் வரை அல்ல
என் சோகங்கள்  கரையும் வரை
வேண்டும் உன் தோழமை நிறைந்த உன் தோள்கள்.
வெட்டி எறிந்தாலும் வேர்விட்டு கிளம்பி
நெருஞ்சி முள்ளாய் கிழிக்கும் நிஜங்களை
சில நிமிடங்கள் உன் நிழலில் தள்ளிவிட்டு
இளைப்பாருகிறேன் கணவிலேனும்.
உன்னிடம் சில நிமிடங்கள்
என்னிடம் சில நிமிடங்கள்
இருந்துவிட்டு போகட்டும் காயங்கள்
நம் இருவரையும் ஒரே கோட்டில் சேர்க்க.
நியாயத்தின் வெடிப்பில் பூக்கும் நிம்மதி வேண்டும்
பொய்யாய் மகிழ்ந்து பொய்யாய் நெகிழ்ந்த
தருணங்களை புதைக்கும் நிஜம் வேண்டும்.
ஒரு முறை ஒரே ஒரு முறையேனும்
உண்மையாய் வாழ வேண்டும்.
நீ வேண்டும்
நீ என்ற நிஜம் வேண்டும். 

Wednesday, March 19, 2014

பெண் எனும் புத்தகம்:













திறந்த புத்தகமாய் இருக்க சுவாரஸ்யமற்றாவள்
அதனாலேயே மூடிய புத்தகமாய் இருந்தேன்
யாரும் படிக்காத புதிய புத்தகமாய் கிடந்தேன்.
யாரோ என்னை தூசிதட்டிவிட்டது போல் உணர்ந்தேன்
என் மன இலைகளில் மழை துளிகளால் கழுவப்பட்டேன்.
இளம் வெய்யிலின் சூட்டில் துளிர் விடுவது போல்
உன் அன்பில் குளிர் காய்கிறேன்.
நீல வானில் பறக்கும் பறவைக் கூட்டத்தில்
உன் எழுத்துக்களை படிக்கிறேன்.
படித்து முடித்தும் முடியாமல்
தொடர்கிறது எழுத்துக்கள்
கடைசி நிமிட பயணம் போல
ஆர்பரிக்கிறது மனம்
நிறைந்த பெளர்ணமியில்
அலைகளின் கால் பதித்த ஞாபகம்
உன் நினைவுப் பக்கங்கள் பறந்தோடி,
கலைந்து கிடக்கிறேன் நீ சேர்ப்பாய் என.

Monday, May 13, 2013

ஆசை












மேகபந்தின் பணித்துளியாய்
நீந்தி செல்ல ஆசை

நீ நிற்கும் இடம் நான் மழையாய் மாறி
உன் நெஞ்சம் நெருங்க ஆசை

நீர் துளியின் ஈரமாய் உன் இதயம்
மாற்ற ஆசை

உன் இதய துடிப்பில் என் இருக்கை
இருக்க ஆசை

இருக்கும் வரைக்கும் உன் நினைவு
பறிக்க ஆசை

என் நினைவை நீ மறக்கையில் நிலத்தில் மறைய ஆசை.



Thursday, November 8, 2012

கிளிஞ்சல்கள்
















நினைவு திரும்புகையில்
கரும்பலகை மனதில்
சில கோடுகள்.
நீண்ட கோடுகள் நெஞ்சம் கிழிக்க
சிறு கோடுகளோ இதயத்தை பிளந்தது.
சில மணிதுளிகளை நிந்தித்ததால்
கணவுகளில் மன்னிப்புகள் பகிர்ந்து கொள்ளப்பட்டாலும்,
கடல் அலைகளின் கிளிஞ்சலகளாய்
அலைக்கழிக்கப்பட்டு எங்கோ ஒதுங்கினோம்.
நம்மை தேர்ந்தெடுத்து கலைந்த மனிதக் கூட்டம்
கடலில் தூக்கி எரிந்து விளையாட
மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன்
ஒற்றையில் அலையாடுகிறேன் வருடக் கணக்கில்...






Sunday, August 19, 2012

சாகா வரம்





















நெருங்கி நின்ற வார்த்தைகள்

நம் பிரிவை ஓதுகின்றன.

நாம் ஒன்றாய் இருந்த நினைவுகள்

விசிறி மடிப்புகளாய் விரிந்து கிடக்கின்றன

சுருங்கி விரியும் தொட்டாசிணுங்கி இலையாய்

மனதில் துளிர்த்த வெட்கம்

இப்போது சுருங்கி கிடக்கிறது

துளிர்த்ததின் நடுவில் கருவேலமுள்லாய்

உன் துரோகம் பரவிக்கிடக்கிறது

வருடங்கள் கரைந்து போகின்றன

படிகளாக பதிவுகளை மட்டும்

மறக்காமல் இட்டுக்கொண்டு...

நினைவுகள் சாகா வரம் பெற்றவையாக

என் நிஜங்களை சாகடித்துக்கொண்டு.....

Friday, November 11, 2011

தொலைதூர‌ ப‌ய‌ண‌ம்




எனைவிட்டு நானே தூரச் சென்று கொண்டிருக்கின்றேன்
தொலைதூரப் பயணம்
உன்னைத் தேடி
உன் நினைவுக‌ளுட‌ன்.

க‌ருமேக‌ இருட்டில் உன் பாத‌ச்சுவ‌டு,
ம‌ழையில் நனையாம‌ல்
என் குடை பாதுகாப்பில் ப‌த்திர‌மாய்.

என்னை க‌டைந்தெடுக்கும் உன் நினைவுகளிலிருந்து
என்னை நானே விடுவிக்க‌ முடியாம‌ல்
அத‌னுள்ளேயே சுற்றிச் சுழ‌ல்கிறேன்.

க‌டையக் க‌டையத் திர‌ண்ட‌தென்ன‌வோ
க‌ச‌ந்த‌ நிஜ‌ங்க‌ளே.....

நீண்ட‌ வழித் தேட‌லில் கிடைத்த‌து
க‌ண‌க்கெடுக்க‌ப்ப‌டாத‌ என் வ‌லிக‌ள் ம‌ட்டுமே.

க‌ளைத்து நிற்கும் நேரம் கூட‌
க‌சைய‌டி கொடுக்கும் உன் ஏளனப் புன்னகை.

மீண்டும் என் பயணம் உன் பாதையில்
அதே புன்ன‌கையை
அன்பில் முடிக்க‌ எண்ணி.....!

Thursday, November 10, 2011

மனப் புழுக்கம்




உன் மனபுழுக்கத்ததை மறைத்துவைத்த
புயல்களை நேசிக்க முயன்று

மறைந்த துகள்களுக்குள்
மண்டியிட்டு நான் அமர்ந்தேன்.

அப்போதும் மலர்ந்த பூவுக்குளிருப்பதாய்
நான் உணர்ந்தேன்.

கண்களுக்கு வேலி போட்டு
நினைவுகளை கட்டவிழ்த்தாய்.

நெருப்பிலும் உன்னுடன் வர‌
மறுப்பில்லை எனக்கு.

என் ஜென்மம் போனாலும்
உனை தொட‌ர‌ என் நிழ‌ல் போதும்.

எட்டிக்காயோ என
எட்டி நின்ற காலத்திலும்

மனதின் ஓரத்தில்
முட்களுடன் நீ வளர்ந்தாய்

பூ பூக்கும் காலம் வரை
வாடாமல் உனை காக்க‌

உன்னுடன் மலர நினைத்து
நிழலாகவே பின் தொடர்ந்தேன்.

என்றேனும் என் மன புழுக்கத்தையும்
நீ அறிவாய் என.

Monday, October 24, 2011

தேடல்


கவனச் சிதறல்களை ஒன்று சேர்த்தால்

தெரியும் இதயத்தில் சிதறிக்கிடக்கும்

உன் ஞாபக பிம்பம்.

உன் நினைவு கசிவுகள்

கசையடியாய் என் நிஜத்தில்

கழன்று சென்ற காற்றடியாகிவிட்டய்

என் வானில் இன்னும் தேடுகிறேன்.

கவிதை எனக்கு...!




கவிதை எனக்கு பரிசு

உன்னால் பாராட்டப்படுவதால்

கவிதை எனக்கு சங்கீதம்

உன்னால் படிக்கப்படுவதால்

கவிதை எனக்கு உயிர்

கருவாக நீ இருப்பதால்

கவிதை எனக்கு சுவாசம்

தென்றலாய் நீ தழுவுவதால்

கவிதை எனக்கு விழி

உலகமாய் நீ சுழல்வதால்

கவிதை எனக்கு மரணம்

கல்லரையாய் நீ இருப்பதென்றால்...