Wednesday, March 21, 2012

உரிமை-6

வளர்பிறை நாள்
எதையும் ஆரம்பிக்க
உகந்த நாளாம்.
சூரிய நிழலின் மேல் நம்பிக்கை
பூலோகத்தில்.
நிழலாடியது நிஜத்தை திருடிக்கொண்டு.

Thursday, March 8, 2012

இறப்பு




பிரிவு என்பது
நிலையாதிருப்பதன் மெளன மொழி.

நாம் கேட்கும் சக்தியிழந்த பின்
கிடைக்கும் பெரும் சப்தம்.

காலம் கடந்த காட்டு வழி ஞானம்.

நேசிப்பவரின் இறுதி சுவாசிப்பு.

நிலம் நீங்கி நிலத்தில் புதைத்தாலும்
உரிமை இழந்து உறவாடும் சவப்பெட்டி.

அவ்வழி சென்றோரின் வரிசையில் நாம்
தொலைந்து போனதை தேடிக்கொண்டு.

Tuesday, March 6, 2012

உரிமை 5

நெருங்கி அமர்ந்தன கிளிகள்
கூடோடு போயின
மரத்தின் வெட்டப்பட்ட கிளை
வீட்டு அலங்கார பொருளாக.

Tuesday, February 14, 2012

உரிமை 4

ஊர் கூட்டி 20 வருட
உரிமையை இழந்தேன்.
இதோ வெளி நிலத்திற்கு
சொந்தமாகி போனது
என் வீட்டு விதை.
மகளின் திருமணம்.

Wednesday, February 8, 2012

உரிமை 3

நட்பில் துரோகம் பழகிப்போனது
பழக்கவைக்கப்பட்டது உன்னால்
இப்போழுதெல்லாம் என் கண்களின் நீரை
சேமிக்க ஆரம்பிக்கிறேன்,
வரண்ட என் இதயத்தின்
நட்பு என்னும் தாகம் தீர்க்கும் என்று.

Monday, February 6, 2012

உரிமை! - 2

அழகிய வண்ணங்கள் சேர்த்த ஓவியமாய் கோலம்
தெருவடைத்து திமிர் பேசியது
தன்வீட்டு மார்கழி கொண்டாட்டத்தை.
வழி அறியோரின் மிதியால்
நசுங்கப்பட்டது சில உயிர்கள்

Wednesday, January 18, 2012

உரிமை! -1

நேற்று என் ஜன்னல் ஓரத்தில்
குழந்தையின் மழலை சிரிப்பாக

இன்று அவள் கூந்தலில்
மோனோலிசா புன்னகையாக

அவள் வீட்டு ரோஜாவாம்
உரிமை கொண்டாடுகிறாள்
உயிரை பறித்து.