Friday, November 19, 2021

அம்மா


 என் திசையாவும் உன்னில் முடியும்

என் விழியோர பார்வை கூட உன்னை தேடும்

என் வழியாவும் உன்னை வந்து சேரும்

என் வருங்காலம் உன்னில் துவங்கும்

மனம் ஏங்கும் முப்பொழுதும் 

இமைக்கும் நொடி கூட பிரியா வரம் வேண்டும்! 

என் பிறப்பினூடே உன் மறுபிறப்பு பெற்றவள். உன் உடல் ஒட்டி வளர்ந்தேன். உன் உயிர் பற்றி கிடந்தேன். விதி பற்றி செல்லும் வாழ்க்கையில் உன் ஓர் விரல் பற்றி சொல்லும் வழி வேண்டும் அவ்வளவே! 

இன்று அன்னையானவள் சேயானாள். பற்கள் அற்ற வார்த்தைகளில் மழலை மொழி கற்றேன். 

உன் சேயாய் துவங்கிய என் வாழ்வில் ஓர் அழகிய பிறழ்வு... 

நான் இன்று தாயானேன் உனை சீராட்டி தாங்கும் தருணத்திற்காகவே...! 




Monday, May 20, 2019

வெப்பம்




வெட்டப்பட்ட மரங்களின்
பெருமூச்சுதான் அனல் காற்றாய்
நமை எரிப்பது

காய்ந்த குளங்களில் மடியில் மடிந்திருக்கும் மீனின் உடலை புழுதிக்காற்று அடக்கம் செய்தது.

கோடை காலங்கள்  நன்கொடையாகமல்
பறவைகளின் தீப்பிடித்த இறகுகளில் நாம் எரித்தெறிந்த தீக்குச்சிகளின் பங்கும் ஒட்டியுள்ளன

வீட்டிற்கொர் மரம் வளர்க்கும்
திட்டம் மறக்கப்பட்டு
வீட்டிலுள்ளோர் மரமாயினர்
தேக்கு, சந்தன, செம்மரங்களாய் சிலையாயினர்...

தட்டுகள் தங்கமாய் மின்னாவிடினும்
அதற்கான நோக்கம் அழியாமல் இருக்கட்டும்

விவசாயிகளின் கண்களில் மட்டும்
பெய்யும் மழை
இனியேனும் வானில் இருந்து
பொழியட்டும்

Tuesday, May 14, 2019




சிலந்தி:

அழகாய் நூல் சற்றுகிறாய்...
சிறு பூச்சிகளை தேடி அலையாமல்
தானாக வந்து விழ,
அலங்கார தோரணம் கட்டுகிறாய்...
விழுந்தவைகளை உடனே பருகாமல் சிலகாலம் துடிக்கவிட்டு
அடங்கும் நேரம் நிதானமாய் விழுங்குகிறாய் மொத்தமாக...
சாகப்போவது அறியாமல் சிறு உயிர்கள் ஊஞ்சலாடுகிறது உன் எச்சில் இழையில்...!

Friday, October 5, 2018

இலையுதிர் காலம்


பூக்களிடத்திலும் சொல்லவில்லை 
என் மனக்கேதங்களை.
பின் எவ்வாறு தெரிந்தன  

வண்ணங்கள் மாறாவிடினும் 
இலைகளை பிரிந்து உதிந்தன 
என் மனப்பிளவை ஒத்தவாரு...?

வாசனையற்ற பூக்களாய் தெருவோரம் உதிர்ந்து, 
வண்ணங்கள் இழக்கும் தருவாயில்.... 
எதற்கும் இருக்கட்டும் என 
எதற்கு மாலை தொடுற்கிறாய்...?

உதிர்ந்த பூக்கள் மீண்டும் மரங்களில் சேர்வதில்லை. 
இலையுதிர் காலம் வரை காத்திருக்கின்றன. 
இலைகளுக்கும் பூக்களின் வலி புரியும் வரை.

Thursday, May 31, 2018

விடிவெள்ளி நீ













விரிந்து கிடக்கும் விண்மீன்களை பந்தென சுருட்டி
உள்ளங்கையில் ஒளித்து
நிறம் மாறும் முன்
நித்திரைக்கு துணையாய் தந்துவிட்டு
கணவுகளில் மட்டும்
வானவில்லின் வர்ணங்களை சிதரவிட்டாய்

வெறிச்சோடிப் போன என் தெருக்களில் மாவிலை தோரணங்களை
வாசனை பூக்களோடு பேசவிட்டாய்
திருவிழா பூண்டது என் மனகிராமம்

நீரில் மிதக்கும் தாமரை இலையாய்
ஒட்டியும் ஒட்டாமலும்
கழிந்த நேசங்களை ஒன்றினைத்து
தாமரை பூக்களாய் மலரவிட்டாய்
உன் சூரியக் கிரணங்களால்

நீண்ட நெடுந்தூரம் ஆகிப்போன
என் பிரியங்களை
மீட்டெடுத்து உன்னில் முடியவைத்தாய்

தேடி தொலைத்த மொழியாக
என்னை விட்டு சென்ற
நிழலாக
தனித்திருந்த என் தனிமைக்கு
தொலைதூரத்து விடிவெள்ளி நீ

வானவில்


நீ பிறந்தாய் வானவில்லாய்
அங்கு ஏழு வண்ணங்கள் மாட்டும் இல்லை
என் வாழ்வின் அனைத்து வண்ணங்களும்
அப்போதே சேர்ந்து பிறந்துவிட்டன…
சில நிமிடங்கள் வர்ணஜாலம் காட்டி
மறைந்து, நிறமிழந்து போகும்
வானவில் அல்ல நீ
பலரின் உயிரில் வண்ணமேற்றும் தூரிகை நீ
எட்டா கணியாய் மேகத்தினுள்ளே ஓடும்
வானவில் அல்ல நீ
யாவருக்கும் வளைந்து கொடுக்கும்  
பக்குவம் பெற்றவன் நீ
மலர்ந்து விரிந்து கண்களில் குளிர்ந்து
மனதில் நிறைந்து நிற்கிறாய் என்றும்
உன் உயரிய பண்பால்
உன் நட்பெனும் மழை நீரீன் கம்பிகளை
பிடித்துக் கொண்டு சூரியனுக்கு
நிகராய் மின்னும் உன் வானவில் வாழ்க்கையில்
ஒர் நிறமாய் மாற ஆசைப்படுகிறேன்,
சாயம் போகா நம் நட்பின் மீதுள்ள நம்பிக்கையால்

Friday, May 4, 2018

உனக்கானவை

உனக்கானவை எல்லாம்
என் இருதய இருப்பிடம்
என் இரவின் மெளனம்
என் சல்லரை சேமிப்பு
என் சிந்திய கண்ணீர் துளி
என் மூச்சின் வெப்ப பயணம்
என் இரவு நிலவின் நெருக்கம்
என் காதலின் வாசற்படி
என் இறைவனின் சந்நிதானம்
என் கற்பின் கருவரை
என் தோல்வில் முயற்சி
என் மெல்லிய கணவின் தொடற்சி
எனக்காக நான் சேமித்த தனிமையும்
சேர்த்து கொண்டு
இப்பொழுது
 உனக்கானவையாக மாறியது