Sunday, June 24, 2012

நிசப்தத்தின் சப்தம்


தருண் அந்த அமானுஷ்ய புத்தகத்தில் முழ்கிய அந்த நள்ளிரவு நேரம் அவனுக்குள் திகில் பரவத் தொடங்கியது. எந்த ஆன்மாவும் உயிர் பிரிந்தபின் அழிவதில்லை. அதனதன் பாவ புண்யத்திற்கேற்ப அடுத்த பிறவிக்காக தயாரகுகிறது. அதன் மறுபிறப்பிலும் சில மாதங்களுக்கு அதன் பழைய நியாபகங்களும், நினைவுகளும் தொடர்கின்றன....இவ்வாறு புத்தகம் முழுவதும் ஆவிகள் பற்றிய தகவல்கள் அடங்கியிருந்தன.

தருண் இதையெல்லாம் ஏன் படித்தோம், அதுவும் இந்த நள்ளிரவில் மனைவி சுஜாதா இல்லாத நேரத்தில் என மிக பயந்து போயிருந்தான். மனைவி இரண்டு நாட்களுக்கு தனது பாட்டியின் உடல் நலன் குன்றிய காரணத்திற்காக செல்ல, ட்ரைனில் ஏற்றிவிடச் சென்றவன் சில புத்தகங்களை வாங்கச் சென்று இந்த ஆவிகளை பற்றிய புத்தகம் கண்ணில் படவே ஆர்வ மிகுதியால் வாங்கி வலிய கிலியை பற்றினான்.

எவ்வளவு தான் புரண்டுபடுத்தும் தூக்கம் வர மறுத்தது. எவ்வாறு பின் தூங்கி போனான் என அறியும் முன்னே காலையும் வந்துவிட சுறுசுறுப்பாக பழைய இரவின் தாக்கம் வராமல் பார்த்து கொண்டு இயல்பாக அலுவலகத்திற்கு கிளம்பினான். இருப்பினும் மனதின் ஓரத்தில் இன்று இரவை கழிப்பதைப் பற்றி பயம் பரவிக்கொண்டுதான் இருந்தது. வீட்டிற்கு யாரையேனும் நண்பர்களை அழைத்து செல்வோமா என எண்ணினான். ஆனாலும் விதி விளையாட அவனுடன் ஒருவரும் வர இயலாமல் போய், பேய் பயம் தலைக்கேறியது, சரி சினிமாவிற்கு சென்று பொழுதை கழித்து பின் வீட்டிற்குச் செல்ல முடிவெடுத்தான்.

பின் வீட்டிற்கு செல்கையில் பின்னிரவாகிவிட்டது. பயத்துடனேயே கதவில் கை வைத்தவனுக்கு வீட்டில் யாரோ இருப்பது போல் தோன்ற சாவியில்லாமலேயே கதவும் திறந்து கொள்ள பயத்தின் உச்சம் அதிகரிக்க இதயத்தின் சப்தமே முரசொலி போல அதிர்ந்து கேட்டு அவனை மேலும் பயமுறுத்தியது. ஹாலை கடக்கையில் நிச்சயமாகிவிட்டது, படுக்கை அறையில் யாரோ இருக்கிறார்கள் என அருகில் செல்லச் செல்ல மல்லிகை மணமும் அதிகரிக்க,உள் இருந்து வரும் மின் விசிறியின் சப்தமும், ஹாலில் மயான அமைதியின் ஊடே எழுந்த சுவர் கடிகாரத்தின் சப்தமும் சத்தியம் செய்தது இது பேயின் நடமாட்டமென. இவையனைத்தும் சேர்ந்து அவனை விரைவில் செயல்படவிடாமல் பயத்தின் உச்சத்துக்கே கொண்டு செல்ல, தடாலடியாக் கதவு தானாக திறந்து கொண்டது அவனை அதிர்ச்சியின் விளிம்பிற்கு செல்லவைத்து ஒர் அடி பின்னால் நகர்ந்தான்.