Tuesday, December 13, 2011

தமிழ் மணக்கும் என் முத்தமிழ் மன்றமிது

கிளிஞ்சல்களின் சப்தங்கள் சங்கமித்த
என் கடற்கரையிது

குயில்களின் கிதங்கள் பரவிய
என் வனமிது

மணிகளின் ஓசைகள் நிரைந்த
என் கோயிலிது

கரவொலிகள் முழங்கிய
என் நகைச்சுவை கூடமிது

அறிவுரைகள் பகிரும்
என் முதிர்ந்த பள்ளியிது.

இரவுகளை ஒளிர்க்க செய்யும்
என் நட்சத்திர கூட்டமிது

வண்டுகளின் ரீங்காரங்கள் கரைந்த
என் பூந்தோட்டமிது

நெல் மணிகள் சிதரிய
என் வீட்டு களஞ்சியமிது

மழை கூட்டங்கள் சூழ்ந்த
என் கருநீல வானமிது

இதை விடுத்து வெருமைக்கு
நான் சென்றால் அங்கும்
ஏங்கி நிற்கும்
என் பாலைவனத்து மெளனமிது.

Friday, December 9, 2011

வேலை வாய்ப்பு
அங்கு கிட்ட்த்தட்ட 20 முதல் 25 பேர் வரை அமர்ந்திருந்தனர். நிகிலுக்கு தன்னையறியாமல் அரும்பரும்பாய் வியர்வை கொட்டத்துவங்கியது. அதை கைக்குட்டையில் துடைப்பதும் அதை யாராவது பார்த்துவிட போகிறார்களே என கூச்சம் கொள்வதுமாக சங்கடத்துடன் முதன் முதலில் பள்ளிக்கு செல்லும் சிறுவனின் மனோ நிலையில் பதட்டத்துடன் அமர்ந்திருந்தான்.அந்த MNCயில் வேலை கிடைப்பதே அபூர்வம்.! கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று அருகில் உட்கார்ந்திருப்பவன் வேண்டுமென்றே அடுத்தவனிடம் பேசி கொண்டிருந்த்தை தற்செயலாக கவனிப்பது போல காட்டிக் கொண்டு அவர்களது பேச்சில் ஊன்றிக் கவனிக்கலானான். அவனும் நிகில் மற்றும் மற்ற சிலரின் கவனத்தையும் ஈர்த்த இருமாப்பில் மேலும் சில குண்டுகளை முடிந்த அளவு அவர்கள் தலையில் போடலானான்.

“இங்க ரெகமண்டேஷன் இருந்தா தான் வேலைக்கே சேர்த்துப்பாங்களாம் நான் (ஒரு பிரபலமான அரசியல்வாதியின் பெயரை சொல்லி) அவர்கிட்டேயிருந்து வாங்கிகிட்டுதான் உள்ளேயே நுழைந்தேன். ஏன் நீங்க யாரும் அப்படி செய்யலியா...?” என கேட்க அனைவரது முகமும் பேயரைந்த மாதிரியாயிற்று. அதுவும் நமது கதாநாயகன் நிகில் நிற்கும் இட‌த்திலிருந்து கீழே நழுவி பூமிக்கடியில் சென்றுவிட்ட்தை போல உணர்ந்தான். “ரெகமண்டேஷன்... ரெகமண்டேஷன்...” என்ற வார்த்தை மட்டும் அவன் காதில் கேட்டுக்கொண்டே இருந்தது. முதல் முறையாக நேர்முகத் தேர்வுக்கு வந்தவனுக்கு இப்படி ஒரு இடியா விழவேண்டும் என இருந்த்து. உடனே அம்மாவை மனது தேட,அம்மாவிற்கு ஃபோன் செய்தான் சிறிது நேரத்தில் கொஞ்சம் தைரியம் ஒட்டிக் கொள்ள திரும்பவும் தன் இட்த்திற்கு வந்து அமர்ந்தான்.

நேர்முகத்தேர்வு ஆரம்பமானது தன் முறைக்காக காத்துக் கொண்டிருந்தான், சிலர் சோகமாகவும்,ரெகமண்டேஷன் பார்ட்டியும் சந்தோஷத்துடன் திரும்பி வருவதை பாத்துக் கொண்டும் அமர்ந்திருந்தான். இவனது முறையும் வந்த‌து அழைப்பை ஏற்று புன்முறுவலுடன் உள்ளே வரலாமா என அனுமதி கேட்டபின் அறைக்குள் செல்ல, நான்கு பேர் அடங்கிய குழு ஒன்று இவன் சான்றிதழ் கோப்பை அவர்களிடம் கொடுத்த‌தும் ஒரு முறை சம்பிரதாயத்திற்கு பார்த்தவிட்டு கேள்விகளை கேட்க துவங்கினர்.

பின் கடைசியாக சிபாரிசு கடிதம் உள்ளதா என கேட்டனர். எங்கிருந்து தான் நிகிலிற்கு அப்படி ஒரு ஆவேசம் வந்தோ தெரியவில்லை உடனே ‘ஏன் சார், ரெகமண்டேஷன் லெட்டர் இல்லைனா இந்த வேலையை எனக்கு தரமாட்டீங்களா’ன கேட்க, அவர்கள் புரியாமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். இவன் லெட்டர் கொண்டுவர கேட்கிறானா இல்லை நம்மை திட்ட ஆரம்பிக்கிறான என ஒருவருக்கும் புரியவில்லை .

நிகிலே தொடர்ந்தான், “ரெகமண்டேன் லெட்டர் இருக்கறவன் வேலைக்கு சேர்ந்தா என்ன ஆகும்னு தெரியுமா சார், முதல்ல உண்மையான‌ திறமையுள்ளவன் நிராகரிக்கப்படுவான், பின் இவன் வேலைக்கு சேர்ந்த‌தும் நம்ம சிபாரிசில வேலைக்கு சேர்ந்துட்டோம்னு திமிரா நெனச்சா உடனே அவன் தலையிலே குட்டு போடுறமாதிரி, ஏதாவது தப்பு கண்டுபிடிச்சு அவன ஓரம்கட்ட பார்ப்பாங்க. இல்லைனா, ரெகமண்டேஷன்ல சேர்ந்திருக்கோமேன்னு தன் பேரையும் ரெகமண்ட் செய்தவர் பேரையும் சேர்த்து காப்பாற்ற அதிகமா டென்ஷன், மன அழுத்தம் உண்டாகும். வேலைல தப்புபண்ண கூடாதுன்னு நெனச்சு நெனச்சே பெரிய தப்பா பண்ணுவான். உங்களால அவன வெளிய அனுப்பவும் முடியாது தொடர்ந்து வேலைல வச்சுக்கவும் முடியாது, ஏன் சார் இந்த மாதிரி டென்ஷனுக்கு நீங்க ஆளாகனும்.இதே சிபாரிசு இல்லாதவன்னா தன் முயற்சியில தன் திறமையால வேலைக்கு தெரிவு செய்யப்பட்டிருப்பான்.மேலும் அவன் திறமையை வளர்த்து கம்பனியையும் வளர்ப்பான். தேவையில்லாம நீங்களும் யாருக்கும் பயந்து திறமை குறைவானவர்களை வேலைக்கு வச்சுக்கவேண்டாம் என கூறி முடித்து மூச்சுவாங்கிக் கொண்டான்.

அவர்கள் நால்வரும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். ”மிஸ்டர்.நிகில்,நீங்க நினைக்கற‌ மாதிரி இங்க நாங்க ரெகமண்டேஷன்ல வர்ற‌வங்கள மட்டும் தேர்ந்தெடுக்கலை. அவங்களை மாதிரி ஆட்களை ஸ்மூத்தா ஹேண்டில் செய்து வெளியே அனுப்பிட்டு உங்கள் மாதிரி உள்ளவங்களோட அப்ளிகேஷன தான் தேர்ந்தெடுக்க முடிவு செஞ்சிருக்கோம்.
எனிவே, உங்க தைரியமான பேச்சும், சிபாரிசு பெற்றவர் மேல உள்ள உங்களோட கண்ணோட்டமும் எங்களுக்கு பிடிச்சிருக்கு. அதனால உங்க அப்ளிகேஷன் தான் முதல்ல ஃபைனல் இண்டர்வியூவிற்கு அழைப்பதற்காக‌ வைக்க போறோம். அதில் தேர்வாக எங்கள் வாழ்த்துகள் என கூறவும், நிகிலிற்கு அப்போதும் பூமி நழுவியது சந்தோஷத்தில்.

Thursday, December 8, 2011

ஷேர் ஆட்டோ
பாஸ்கரன் அன்றும் பரபரப்பாக கிளம்பிவிட்டான். இப்போ போய் ஆட்டோ பிடித்தால் தான் சரியாக இருக்கும் இந்த டிராஃபிக் ஜாமில் மாட்டிக்கிட்டு 10 நிமிஷத்தில் போகவேண்டிய ஆபிஸ்க்கு 45 நிமிஷம் ஆகிறது. சரி இன்னும் எத்தனை நாள்னு பார்ப்போம். என எண்ணியவாரே வீட்டிலிருந்து கிளம்பிவிட்டான். அவசரமாக வந்தவன் பஸ் நிறுத்தத்திற்கு வந்த 3 ஆட்டோக்களையும் விட்டுவிட்டு அடுத்த ஆட்டோ...அடுத்த ஆட்டோ என பார்த்துகொண்டிருந்தான். அவனது நன்பன் ஷாம் பைக்கில் கிராஸ் செய்ய ஹாய் டா என கூறி மீண்டும் கர்மசிரத்தையாக அடுத்த ஆட்டோவை பார்வையுற்றான்.

ஷியமே அருகில் வந்து “ என்னடா இது அநியாயம், நானும் 10 நாளா பாக்கறேன் உன் வண்டிய என் கிட்ட கொடுத்துட்டு நீ ஷேர் அட்டோ பிடிச்சு ஆபிஸ் வர, இதில் சில நேரம் லேட் ஆகி மெனேஜரிடம் திட்டுவேற வாங்கற. போறும்டா இந்த கண்ட்றாவி வேலையெல்லாம். என் கூட இன்னைக்கு நீ வர. எனவும் பாஸ்கர் ஏதோ சொல்ல வாயேடுக்க, ஷியாம் “ஒன்னும் பேசாதே, வா போகலாம், எனவும் ஷேர் ஆட்டோவரவும் சரியாக இருந்த்து. அதை ஒரு நிமிடம் உற்று பார்த்ததும் ஷாயாமிற்கு பதிலேதும் சொல்லாமல் ஏற சென்றான்.

ஷேர் ஆட்டோவை ஒரு அலசு அலசினான் ஷியாம் ஒரு முருகர் படம், ஒரு ஆளின் புகைபடம் அதற்கு ஒரு மாலை. ஒரு வேளை பெண் யாரையாவது நினைத்து சுத்துகிறானோ எண்ணி வண்டியை நோட்டமிட்டான். வண்டியில் யாரும் இல்லை. சிறிது நேரம் நின்றுவிட்டு சென்றது அந்த ஷேர் ஆட்டோ. ஒன்றும் புரியாமல் விழித்துவிட்டு அவனும் பைக்கை கிளப்பினான்.

மதிய உணவு இடைவேளையில் பொறுக்கமுடியாமல் ஷியாமே பாஸ்கரிடம் சென்று கேட்டுவிட்டான். அதற்கு சிரித்துக்கொண்டே பாஸ்கர், “ தேவையில்லாம தப்பு தப்பா யோசிக்காதேடா, நான் ஒரு நல்ல எண்ணத்தோடதான் அந்த ஷேர் ஆட்டோவில் வருகிறேன்.
நான் ஒரு நாள் வண்டி சர்வீஸ் விட்டதால் ஷேர் ஆட்டோவில் வருவதாக ஆகிவிட்டது. அப்போது பார்த்து நிறைய ஆட்டோக்கள் வந்தனவே ஒழிய காலியாகவோ சிறிது இடத்துடனோகூட வரவில்லை. எல்லாவற்றிலும் கூட்டம் நிறம்பிவழிந்தது.
என்ன செய்ய ஆபிஸிற்கு டயம் ஆகிவிட்டதே என நினைத்துக்கொண்டிருந்த போதுதான் இந்த ஷேர் ஆட்டோ வந்து நின்றது அதுவும் காலியாக. என்ன ஆச்சர்யம் என சந்தோஷத்துடன் ஏறி அமர்ந்தேன்.

சிறிது நேரம் நின்று காத்திருந்த ஆட்டோவை டயம் ஆனதால் சீக்கிரம் போகச்சொல்லி கூறினேன். ”சரி தம்பி இப்போ கிளம்பிடறேன்”, என எனக்கு பதிலளித்தவர் திரும்பி என்னை பார்த்து முறுவலித்தார். எனக்கு ஆச்சர்யமாகவும் சிறிது அதிர்ச்சியாகவும் கூட இருந்தது. ஏனேன்றால் வண்டியை ஓட்டியவர் ஒரு மூதாட்டி. 60 வயதுக்கு மேல் மதிக்கத்தக்க ஒரு வயதான பாட்டி ஷேர் ஆட்டோ ஓட்டுகிறாரா என அதிர்ந்துதான் போனேன்.

நான் இறங்கும் வரை ஒருவர் கூட ஏறாமல் இந்த ஆட்டோவை தவிர்த்துவந்தனர். அவரிடன் வந்த்திற்கான காசை கொடுத்துவிட்டு அன்று ஆலுவலகம் வந்தடைந்தேன்.அன்று முழுவதும் அந்த பாட்டியின் நினைவு இருந்துகொண்ட்டே இருந்த்து எனக்கு. எனது பைக் வர மேலும் ஒரு நாள் ஆகலாம் என கூறினான் மெகானிக். சரியென அன்று மாலை திரும்பவும் ஷேர் ஆட்டோவிற்காக காத்திருக்கையில் ஏனோ அவரை பார்க்கவேண்டும் போல இருந்த்து. மற்ற வண்டிகளை வேண்டுமென்றேன் தவறவிட்டு இவருக்காக காத்திருந்தேன். அவரும் வந்தார் சிரித்த முகத்துடன் என்னை அடையாளம் கண்டு கொண்டு வரவேற்றார். நானும் முன் இருக்கையில் சென்று அமர்ந்து அவரிடம் மெல்ல பேச்சு கொடுக்க ஆரம்பித்தேன்.

“தம்பி, என் வயசு 63 ஆகுது, என் வீட்டுக்காரன் ஒரு ஆட்டோ டிரைவர், ஷேர் ஆட்டோவும் வாங்கி ஓட்டிகிட்டு இருந்தார். நாங்க இரண்டு பேரும் காதலித்து கல்யாணம் செஞ்சுகிட்டவங்க, நல்ல முறைல வாழ்ந்தோம். இப்போ ஒரு 6 மாசத்துக்கு முன்னாடி, ஹார்ட் அட்டாக்குல அவர் இறந்துட்டார். எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியலை, என்னோட பெண் காலேஜ் முடிக்க போறா.காசுக்கு என்ன பண்ணறதுன்னு தெரியாம இருக்கும் போதுதான், அவர் காதலோட சின்ன வயசுல ஆட்டோ ஓட்ட கத்துகொடுத்தார் லைசன்சும் வாங்கி நானும் ஆட்டோ ஓட்டினேன். அவருக்கு முடியாத சமயத்துல நான் தான் சவாரிக்கு போவேன். ஆனா இப்போ எனக்கு வயசு ஆயிடுச்சு என்னால ஓட்ட முடியாது ஏதாவது ஆக்ஸிடெண்ட் பண்ணிடுவேன்னு நினைச்சு யாரும் இதிலே ஏறமாட்டேங்கறாங்க தம்பி.

எனக்கும் ஆட்டோ ஓட்டி அனுபவம் இருக்குன்னு சொன்னாலும் எத்தனை பேர்க்கிட்ட என்னால சொல்லிகிட்டே இருக்கமுடியும் அதுவும் இங்க ஷேர் ஆட்டோன்னா ரொம்ப டிமாண்ட், சாதாரண ஆட்டோவில் போவதை தவிர்த்து இப்போ எல்லோரும் ஷேர் ஆட்டோல தான் போக விரும்பறாங்க. சரி இதை ஓட்டி காலத்தையும் ஓட்டிடலாம்னு வந்தா, இங்க ஷேர் ஆட்டோ சங்ககாரங்க ஏதோ இளைக்காரமா பார்க்கறாங்க. என்ன செய்ய தம்பி உன்ன மாதிரி உள்ள நல்லபுள்ளைங்கதான் எப்பவாச்சும் அவசரம், மத்த ஆட்டோவில் இடம் இல்லைனா ஏறுதுங்க. மத்தபடி என் மேல நம்பிக்கை வச்சு ஒருத்தரும் ஏற மாட்டேங்கறாங்க தம்பி”,என கூறும் போதே அந்த வயதான புதுமைப்பெண்ணின் கண்ணிலும் கண்ணீர் திரண்டது ஆற்றாமையால்.

“அதாண்ட நான் ஒவ்வோருநாளும் அவங்களுக்கு சின்ன உதவியா இருக்கட்டுமேன்னு அவங்க ஆட்டோவில போறேன். இப்போ இரண்டு ஸ்டாப் தள்ளி இரண்டு பொண்ணுங்க ஏற ஆரம்பிச்சுருக்காங்க. வரும்போது ஒரு பெரியவர், வருகிறார். அப்படியே கொஞ்சம் ஆட்கள் வர ஆரம்பிச்சாங்கன்னா. மத்தவங்களும் இவங்களை பார்த்து பார்த்து தைரியமா இந்த ஆட்டோவில வருவாங்க. அதுக்குத்தான் இந்த முயற்சி. இன்னும் 10, 15 நாள் தான்...என்னோட இந்த சின்ன சேவை எனக்கு மனநிறைவை தருதுடா”, என்ற பாஸ்கரிடம் நானும் வருகிறேன் என்பது போல் ”கோபால் இந்தா பைக் கீ, நானும் பாஸ்க்கரும் ஒன்னா ஷேர் ஆட்டோவில் வருவோம் ரூமுக்கு வந்து கொடு,என்றான் ஷியாம். புரியாத கோபால் தன் காதலியுடன் சவாரிக்காக சந்தோஷமாக ஏற்றுக்கொண்டான் இந்த கடமையை.

Wednesday, December 7, 2011

அறிமுகம்
உன் அறிமுகம் எனக்கு
தாய்மொழியாம் தமிழ்
மறைமுகமாய் வெளிப்பட்டது

என் எழுத்தின் உன் பிழைத்திருத்தங்கள்
பின்னிருந்து அக்கரை பேசியது எனக்காக.

உன் கோவ கேள்விகளில்
விடையும் ஒளிந்து சிரித்தது என்னை பார்த்து

செதுக்கிய சிற்பமாய் நானாக,
உளியின் கல்லாய் உருமாற,
என்னைவிட்டு கவலை கற்கள் அகலவைத்தாய்

தெளிந்த நீரோடையின் கூழாங்கற்களாய்
உவமேயம் அன்றி உவமானமாய்
நட்பில் தொடங்கி சகோதரத்தில் முடிந்த
உறவு பாலமாய் தொடர்ந்தாய்

காற்றாய் மாறி என் திசை காட்டினாய்
மேகத்துடன் மேகமாய் பயணித்து
மண்ணில் விழும் மழையாய் உருமாற்றினாய்

நிலவு பூசி முகம் காட்ட
சூரியனுக்கு ஒர் இரவு
என் துயர் இருளில்
நீ நிலவு கதிர்வீச்சு

உயிர்த்தோழமையே
உலகிற்கு தெரியா உண்மையிது
நீ என் அடுத்த அம்மாவென்று.

Friday, December 2, 2011

சக்கரகட்டி

"நிரஞ்சனா.... நான் ஆபிஸ்க்கு கிளம்பறேன். நீ இன்னைக்கு லீவ் தானே...? நீயே போய் நான் சொன்ன லிஸ்ட்ல உள்ள சாமானை மட்டும் வாங்கிண்டு வந்துடு...சரியா...? எனக்கு இன்னைக்கு வர லேட் ஆகும்." என அவசரமாக ஷூ மாட்டிக் கொண்டே பேசும் கணவனுக்கு தஞ்சாவூர் பொம்மையாக தலையை ஆட்டி பதில் சொல்லிக் கொண்டிருந்த நிரஞ்சனாவின காதில் பக்கத்து வீட்டு மலர்கொடியின் குரல் வாசலைத் திரும்பிப் பார்க்கவைத்தது.

இடுப்பில் குழந்தையும் கையில் சிறிய கிண்ணமுமாய் நின்று கொண்டிருந்த மலர்கொடி, "நீரூ... கொஞ்சம் சக்கரை இருந்தா தாயேன் குழந்தைக்கு பால் கரைக்கனும்" என கேட்க, நிரஞ்சனா
" என்ன அக்கா நீங்க இப்படி கேட்கறீங்க, கிண்ணத்தைதாங்ககா...." என வாங்கி கொண்டே, பாருங்க இப்பத்தான் சக்க்ரை தீந்து போகப்போக்குது அவசரத்துக்கு கொஞ்சம் தான் இருக்குனு இவரை வாங்கிகிட்டு வர சொன்னா, இவர் என்ன வாங்கிகிட்டு வர சொல்லிட்டார். இத மாதிரி நிறைய காரணங்களால் அடிக்கடி தீருது ஒரு 2 கிலோவா வாங்கி போடுங்க சொன்னா கேக்கராரா இவரு...இருங்க அக்கா இருக்கற‌ சக்கரைல கொஞ்சம் தரேன் என நீட்டிமுழ‌க்கி பேசி ஏன் கேட்டோம் என் மலருக்கு தோன்றவைத்துவிட்டு உள் சென்றாள்.

உள்ளே அவளுடன் வந்து கிண்ணத்தில் சிறிதளவே கொடுப்பதைப் பார்க்கையில் முகம் மாறியது அவள் கணவன் திவாகருக்கு. "ஏன் டப்பா நிரைய சக்கரை வைச்சுகிட்டு இவ்வளவு கம்மியா தரே அவங்களுக்கு" என கேட்டவனை,"உங்களுக்கு ஒன்னும் தெரியாது, போதும் எல்லாம் இவங்களுக்கு." என கூறி வாயடைத்துவிட்டாள்.

சிறிது நேரத்தில் திவாகர் அலுவலகம் சென்றது அர‌க்கப் பற‌க்க மலர்கொடியின் வீட்டு சமையலறை ஜன்னலில் வந்து மலரை கூப்பிட்டாள்.

மலர்கொடிக்கு ஒரே ஆச்சர்யம்...ஒரு டப்பா நிரைய சக்கரையை போட்டு கொண்டு வந்து அந்த ஜன்னலில் வழியே கொடுத்துக் கொண்டே, “என்ன அக்கா நீங்க...அவர் முன்னாடி கேட்கறீங்களே, அவரை பற்றி உங்களுக்கு தெரியாதா சரியான கஞ்சனாச்சே, இன்னைக்கு கூடவே வந்து எவ்வளவு கொடுக்கறேனு பார்க்க வேற செய்தார். அதான் அவர் ஆபிஸ் போனதும் கொண்டுவந்தேன் என கூறி கையில் தவழும் குழந்தையை எட்டி கொஞ்சி “இந்த சக்கரகட்டிக்கு இல்லாத சக்கரயா என்ன...?” என கேட்டுவிட்டு செல்லும் நிரஞ்சனாவை ஆச்சர்யம் விலகாமல் பார்த்துக் கொண்டே நின்றாள் மலர்கொடி.