Tuesday, November 15, 2011

பொய் முகம்




பொய்யும் புரட்டும் முகத்தில் தாண்டவமாடி
பொய்யென உரைக்கும் மெய்யாய்.

வெளிப்பட்ட வேஷம் துவேஷமாய் மாற‌
உரைந்து நிற்கும் உண்மையும்

இரக்க குணம் அர‌க்க குணமாய்
நெஞ்சை பிளந்து வெடிக்கும் நாற்புறமும்

காலம் முழுதும் கசையடியாய்
கன‌வுகள் தொலைத்த க‌ருவறையாய்
மீந்து கிட‌க்கும்

எதை கொண்டு அதை அழிக்க‌
எதை கொண்டு நான் விழிக்க‌
என‌ கெஞ்சி கேட்கும் ம‌னித‌மும்.

நீரூற்றி நெருப்பூற்றி
நெடுங்கால‌ நினைவூற்றி
துவேஷ‌ம் வ‌ள‌ர்ந்து நிற்கும் வேளையிலே
உண்மை உறுத்த‌லாய் உள்ம‌ன‌தை உடைக்கும்

திருந்திட திண்டாடும் ம‌ன‌தின் மூலையில்
பொய் முக‌ம் அழிய‌த்துவ‌ங்கும்.

நல்ல‌தொரு ஆர‌ம்ப‌ம்
நாள் முடிவில் துவ‌ங்கும்.

மாற்ற‌ இய‌லாத‌ ம‌ன‌தினை
மாற்றிவிட்ட‌ பெருமித‌த்தோடு
கால‌ம் க‌டைசி நிமிட‌ங்களை க‌ட‌க்கும்...

Monday, November 14, 2011

அழைப்பிதழ் வேண்டுகோள்....!




மணமக்கள் தங்கள் திருமணத்திற்கு அழைக்கும் வரவேற்பு மடல்

எங்கள் மணவாழ்க்கையில் மணம் நிறைந்திட‌
ம‌ண‌த்துக்கொண்டிருக்கும் பூக்களே வாரீர்

எங்கள் வாழ்க்கைச் சக்கரம் நில்லாதோட‌
அச்சாணியாகிய‌ சொந்த‌ங்க‌ளே வாரீர்

நில‌ம‌க‌ளும் இட‌ம் த‌ர, ம‌லை ம‌க‌ளும் துணைவ‌ர‌
க‌லைம‌க‌ளும் கை கோர்க்க‌ வாழ்த்திட‌ வாரீர்

இனிய‌ த‌மிழில் இல்லற‌ம் ஆர‌ம்பிக்க‌
இந்த‌ இனிய‌ நாளில் வாழ்த்துப்பாட வாரீர்.

நீங்கா மணங்கொண்டு மாறா நற்குணங்ககொண்டும்
நிலைத்த‌தொரு வாழ்வைப் பெற வாழ்த்திட வாரீர்...!

Friday, November 11, 2011

தொலைதூர‌ ப‌ய‌ண‌ம்




எனைவிட்டு நானே தூரச் சென்று கொண்டிருக்கின்றேன்
தொலைதூரப் பயணம்
உன்னைத் தேடி
உன் நினைவுக‌ளுட‌ன்.

க‌ருமேக‌ இருட்டில் உன் பாத‌ச்சுவ‌டு,
ம‌ழையில் நனையாம‌ல்
என் குடை பாதுகாப்பில் ப‌த்திர‌மாய்.

என்னை க‌டைந்தெடுக்கும் உன் நினைவுகளிலிருந்து
என்னை நானே விடுவிக்க‌ முடியாம‌ல்
அத‌னுள்ளேயே சுற்றிச் சுழ‌ல்கிறேன்.

க‌டையக் க‌டையத் திர‌ண்ட‌தென்ன‌வோ
க‌ச‌ந்த‌ நிஜ‌ங்க‌ளே.....

நீண்ட‌ வழித் தேட‌லில் கிடைத்த‌து
க‌ண‌க்கெடுக்க‌ப்ப‌டாத‌ என் வ‌லிக‌ள் ம‌ட்டுமே.

க‌ளைத்து நிற்கும் நேரம் கூட‌
க‌சைய‌டி கொடுக்கும் உன் ஏளனப் புன்னகை.

மீண்டும் என் பயணம் உன் பாதையில்
அதே புன்ன‌கையை
அன்பில் முடிக்க‌ எண்ணி.....!

திருமணம்




கணவன்

ஆறாடி உயரத்தில் உலவும்

அழகிய‌ சுவர்.

பெயற்க முடியாமல்

அதில் ஒர் கல்லாய் மனைவி.

சிறுவனின் தூண்டில்


நிறைவேறியது

நீண்டநாள் ஆசை.

மீன் குஞ்சுவின் முதல் நீந்தலில்.

Thursday, November 10, 2011

மனப் புழுக்கம்




உன் மனபுழுக்கத்ததை மறைத்துவைத்த
புயல்களை நேசிக்க முயன்று

மறைந்த துகள்களுக்குள்
மண்டியிட்டு நான் அமர்ந்தேன்.

அப்போதும் மலர்ந்த பூவுக்குளிருப்பதாய்
நான் உணர்ந்தேன்.

கண்களுக்கு வேலி போட்டு
நினைவுகளை கட்டவிழ்த்தாய்.

நெருப்பிலும் உன்னுடன் வர‌
மறுப்பில்லை எனக்கு.

என் ஜென்மம் போனாலும்
உனை தொட‌ர‌ என் நிழ‌ல் போதும்.

எட்டிக்காயோ என
எட்டி நின்ற காலத்திலும்

மனதின் ஓரத்தில்
முட்களுடன் நீ வளர்ந்தாய்

பூ பூக்கும் காலம் வரை
வாடாமல் உனை காக்க‌

உன்னுடன் மலர நினைத்து
நிழலாகவே பின் தொடர்ந்தேன்.

என்றேனும் என் மன புழுக்கத்தையும்
நீ அறிவாய் என.