Saturday, October 29, 2011

சாலையொர பூக்கள்
காலச் சுமை போல் பலரது
காலடி சுவடு உன் மீது.

வெய்யிலும், மழையும் இவ்வாறா
உன்னை ஆதரிக்க வேண்டும்...?

பெற்றவள் மடியில் ஏற்கவில்லை
பாரமெனகருதி மண்ணில் உதிர்த்துவிட்டாள்

இயற்கையாய் உன் வாசம்
உயிரிழக்கும் முன்,
வண்ணங்கள் தோய்ந்த உன் உடல்
வலுவிழக்கும் முன்,
எந்த செலவுமின்றி புதைக்கப்பட்டாய்

உற்றார் உறவினர்களாய் காரியம்
செய்த வாகங்களும்
மற்றபிற பயில்வான்களும்
நன்றி தெரிவித்துவிடு

நல்லவேளை உங்களில் ஒருவனாய்
பாவக்கணக்கில் மிதிபடாமல்
இருந்தேன் என்று....

Monday, October 24, 2011

விண்மீன்மத்தாப்பு சிதறலாய் மனது

சிதறிய துகள்கள்

காணாமல் போனாலும்

தூரத்தில் தெரியும் சிலநொடி சந்தோஷம்.

இருட்டு தேசத்தில் ஒளிமுத்துக்கள்

பார்வை அற்றவனுக்கு

சிலநொடிப்போழுது மட்டும்

பார்வை கிடைத்த மகிழ்ச்சி போல்,

நிழல் என்று தெரிந்தும்

நிஜமாய் உணர்க்கிறேன்

வானத்தில் நிலைக்கும் விண்மீனாய்

மாற கோருகிறேன்.

விதவை திருமணம்சிதையில் சிக்காத வெள்ளைபுறா

சிக்கிக் கொண்டது

சில்லரைக் கூண்டுக்குள்

விட்டில் பூச்சியின் வாழ்க்கை

வெளிச்சத்தின் அருகில்

சென்றாலும் விடிவதில்லை.

விடாமுயற்சியில் செல்கிறது வாழ்க்கை

விட்டில் பூச்சியின் வடிவில்.

தேடல்


கவனச் சிதறல்களை ஒன்று சேர்த்தால்

தெரியும் இதயத்தில் சிதறிக்கிடக்கும்

உன் ஞாபக பிம்பம்.

உன் நினைவு ச்சிவுகள்

கசையடியாய் என் நிஜத்தில்

கழன்று சென்ற காற்றடியாகிவிட்டய்

என் வானில் இன்னும் தேடுகிறேன்.

கவிதை எனக்கு...!
கவிதை எனக்கு பரிசு

உன்னால் பாராட்டப்படுவதால்

கவிதை எனக்கு சங்கீதம்

உன்னால் படிக்கப்படுவதால்

கவிதை எனக்கு உயிர்

கருவாக நீ இருப்பதால்

கவிதை எனக்கு சுவாசம்

தென்றலாய் நீ தழுவுவதால்

கவிதை எனக்கு விழி

உலகமாய் நீ சுழல்வதால்

கவிதை எனக்கு மரணம்

கல்லரையாய் நீ இருப்பதென்றால்...

Wednesday, October 19, 2011

மலட்டுத்தாயின் மகவு
சேற்றுச் செந்தாமரை நீ

இறைவனின் இரக்கம் நீ

நிலவின் நிழலாய்

கனவின் கருவாய்

என் இதய வாசலில் கால் பதித்தாய்

பாலைவனத்திலும் வானவில்லின்

எட்டாவது வர்ணமாய்

நீ தவழும் அழகைப் பார்த்திருப்பேன்

என் தலை சாயும் வரை உடன்வா...

வாழ்ந்து தான் பார்போம்.

வாழ்க்கையின் எதிரெதிர் துருவங்கள்

சேரும் போது சுபமாகட்டும் இங்கே...!

பரிசுப் பொருள்:


நீ சேர்க்க முடியாவிட்டால் என்ன..?
நான் சேர்க்க முயல்கிறேன்.
உன்னை நினைத்து
காதலில் கரையும் நிமிடங்களை...

சில வேளைகளில் குதுகலிக்கவே
நேரம் சரியாக இருந்தது.
சில வேளைகளில் கோபப்படவே
நேரம் சரியாக இருந்தது.
எவ்வேளையில் உன்னை நெருங்குவது
புரியாமல் போனது எனக்கு.

பாசத்தைக் கொட்டும் நேரத்தில்
இரக்கம் காட்டினாய்.
இரக்கம் கொள்ளும் நேரத்தில்
வெருப்பைக் கொட்டினாய்.

மாற்றம் என்பது மாறாதது என்றாலும்
உன் மாற்றம் மனதை
கிழித்த வேதனை வேர்களின்
வேளைகள் அதிகம்.

அது மரமாய் வளர்ந்து
உனக்கே பூஞ்சொரியும் நந்தவனமாய்
மாறிய விந்தை வேளைகளும் அதிகம்.

காத்திருப்புக்கு கணக்கீடுகள் இருக்கலாம்
காதலோடு வாழும் மனதுக்கு
வேளைகள் வழி சொல்லாது.

உன்னால் நான் சேமித்த் நிமிடங்கள்
அனைத்தும் என் இதய அறையில்
பரிசுப் பொருட்களாய் காத்திருக்கும்
எவ்வேளையும் உனக்காக.

Tuesday, October 18, 2011

குறுங்கவிதை...

11. விரல்களின் வலுகட்டாய‌
சந்திப்பில் எழுத்துக்கள்
என் கற்பனைக்கு தீனிபோடுகிறேன்
இரையாய் என் வாழ்க்கை.


12. நட்சத்திரங்கள் யாருடைய
ஆசைகளின் முற்றுப் பள்ளிகள்...?

குறுங்கவிதை...

9. கடைசியில் சம்மதித்துவிட்டாள்
காதலிக்க அல்ல.
அவள் கல்யாண பந்தலில்
முன்நின்று அட்சதை தூவ.

10. ' மாமா, மச்சான் எப்படிடா இருக்க...?'
கூவும் குரல்கள்
உறவுகளில் நட்பை காணாமல்
நட்பில் உறவுகளை தேடுகின்றனர்.

குறுங்கவிதை...

7. காலம் என்னும் சூரிய கதிர்களால்
உன் நினைவு என்னும் பனித்துளி
மறைந்துவிட்டது. ஆம் என் நாட்களில்
நீ தொலைந்த நிமிடங்களானாய்.

8. ம‌ழை:
ம‌ர‌யிலைக‌ளில் முத்துக்க‌ள்.
ம‌ழைத்துளின் ச‌ர‌ணால‌ய‌ம்.
ம‌ர‌ண‌ வாச‌லில் உயிர் த‌ண்ணீர் பெற்றேன்.
க‌ரிச‌ல் காட்டில் ம‌ழைத்துளி.

குறுங்கவிதை...

5. என் வாழ்க்கை கேள்விக்குறியாக‌
இருக்கும் போது அதை தாங்கி
நிற்கும் புள்ளியாக‌ நிற்கிறாயே...?

6. நீ ம‌ட்டும் தான் க‌விதையை
ரசிப்பவனா. நானும் ரசிப்பேன்
கவிதை நீயாக இருந்தால்.

குறுங்கவிதை...

3.முடிவான‌ ஒன்றை
முறிய‌டிக்க‌ முய‌லும்
முற்றுப் புள்ளி நான்.


4. நீ ஏறும் ஒவ்வொரு ப‌டிக‌ளிலும்
கைப்பிடிச் சுவ‌ரை ந‌ம்பாதே
உன் கால்க‌ளை ந‌ம்பு.

குறுங்கவிதை...

1. க‌ண‌வுக‌ள் ப‌லிப்ப‌தில்லை ஆனால்
காண்கிற‌வ‌ர்க‌ள் ச‌லிப்ப‌தில்லை.

2. ம‌ர‌ண‌ம்:
நிம்ம‌தியை தேடி ஒரு ஜீவ‌ன்
நிர‌ந்த‌ர‌ நித்திரையில்.
இதோ உன் நித்திரைக்கு
என் ஆழ்ந்த‌ மொள‌ன‌ங்க‌ள்.

பொறுமைக்குள் சிக்கும் சினம்

குடையை கிழிக்கும் மழையாய்
என் சினத்தின் கணம்
தாங்காமல் உன் மனதை கிழிக்கிறது.

பொறுமை போத‌னை செய்யும் புத்தக‌ம்
என் சின‌ம் என்னும் புழுதிப் புய‌லுக்குள் சிக்கிக் கொண்ட‌து.

வழிவ‌ழியாய் வ‌ந்த‌ பழ‌மொழிக‌ளும்
ப‌ழியாய் புதைந்து போன‌து.

சீறும் பாம்பாய் சின‌ம் த‌லைதூக்க‌
சிறகொடிக்க‌ப்ப‌ட்ட‌ கிளியாய்
துள்ளும் உன் ம‌னம்.

உருகி உருகி வ‌ழியும் நெருப்புக் குழ‌ம்பாய்
என் நாக்கில் உருண்டோடி வ‌ரும் வார்த்தைக‌ள்
உன் உதிர‌ம் உறையும் வ‌ரை கொட்டிய‌து.

உண்மையை உண‌ர்ந்தும் உண‌ரா ஜ‌ட‌மாய்
நீ த‌ந்த‌ அன்பு சொற்க‌ளை
வ‌லியாக‌ நான் திருப்பித்த‌ர‌,
நிக‌ழும் நிக‌ழ்கால‌ம் இற‌ந்த‌கால‌மாகிய‌து.

ச‌வ‌மாய் வாழும் பொழுதுதான்
உயிர் பெற்ற‌ பொறுமைக்குள்
சிக்கிய‌ சின‌ம் சித‌றிப்போன‌து.

நட்பின் வருகை

என் வாசல் கிளிஞ்சல்களின் சத்தம்

உன் வருகையை வரவேற்று

கடனுக்குக் கூட கண்ணீர் மிச்சமின்றி போனது

உன் பூமுகத்தை பார்த்து

வசந்தகாலம் வாசல் வந்தது

புன்னகை பூத்து

என்னுள் நுழைந்துவிட்டாய் இதயம் துடிக்கும்

இனி உனக்கும் சேர்த்து

வா காலம் முழுவதும் கை கோர்ப்போம்

காலனையும் விலைக்கு கேட்போம் சேர்ந்து.

என் வாழ்க்கை வாக்கியங்கள்..!

அம்மா..! என் முத‌ல் வாக்கிய‌மாய் முழு வாக்கிய‌மாய்...!

உன்னால் நான் க‌ண்ட‌ இர‌ண்டாம் வாக்கிய‌மாய்

க‌ல‌ங்க‌ரை விள‌க்காய் என் வாழ்க்கைக்கு அடைக‌ல‌மாய் அப்பா..!

உற்ற‌ உற‌வாய் உண‌ர்வாய், உட‌ன்பிற‌ந்த‌வ‌ள் என்னும்

உன்னால் நான் கொண்ட‌ ம‌ற்றோரு வாக்கிய‌ம்...!

ம‌கிழ்ச்சியையும் சோக‌த்தையும் ஒன்றாய் கொட்டிக் கொண்டாட‌

ந‌ண்ப‌ர்க‌ள் என்னும் திருவாக்கிய‌ம்....!

உட‌ன்பிற‌ந்த‌வ‌ளின் இன்னோருர் உயிராய்

என்னை நோக்கி பிஞ்சு கை நீட்டும்

ஒர் இனிய‌ வாக்கிய‌ம்...!

என் ம‌ன்ற‌ம் வ‌ந்த‌ ம‌ழைக் காற்றாய்

என்னை எப்போழுதும் த‌ழுவிச் செல்லும் என்றும்இத‌மாய்

முத்த‌மிழ் ம‌ன்ற‌ம் என்னும் பெரும் வாக்கிய‌ம்...!

வாழ்க்கை மாற்றம்


நேற்று இந்த மாற்றம் ஏற்படவில்லை

சட்டென்று இன்று மட்டும் ஏனோ...?

வாழ்வை திருப்பிப்போட கணநேரமே போதுமானதா...?

நாடகத்திற்கு கூட ஒத்திகையுண்டு

வாழ்க்கை ஓட்டத்திற்கு மட்டும் ஏன் இல்லை...?

திருத்தப்படாமல்விட்ட பிழைகளுக்கு

திருந்திய மனிதர்கள்கூட பிழைத்திருத்தர்கள் ஆக முடியாது.

கட்டாய வாழ்க்கையில் காதல் தொலைந்து போனது

காதல் வாழ்க்கையில் கட்டாயம் தொலைந்து போகிறது.

பிறர் வாழ்க்கையை திரிக்கத் தெரிந்தவர்களே வாழ்வதானால்

இங்கு வாழ்க்கையை தொலைத்தவர்கள் கடைசிவரை

தேடித் தேடியே வாழ்வை முடிக்கின்றனர்.

பலரது வாழ்க்கையில் மாற்றம் நிரந்தரப் புள்ளியாய்

முடியாமல் தொடர்கிறது.....

சுமைநாட்காட்டியை போல் நாட்களை தாங்குகிறேன்

நாட்களை சுமக்கும் நாட்காட்டிக்கு வலிக்கவில்லை

ஏனோ எனக்கு வலிக்கிறது அதனை கடந்து செல்ல.

மாதங்கள் அனைத்தும் நாட்களை சுமப்பது போல்

என் எண்ணங்கள் அனைத்தும் உன்னை சுமக்கின்றனவே.

நீரில் முழ்கிய நிமிடங்களையும்

நெருப்பில் வெந்த நிமிடங்களையும்

கொடுத்த நாட்களைப் பார்த்த பின்புதான் தெரிந்தது

இவையெல்லாம் நான் சுமந்தது வெற்றுச் சுமை என்று.

எரிந்துபோன என் நிமிடங்களின் சாம்பலைக்கூட

சுமக்கவில்லை காலம்

என் முடிவோடு கொண்டு போனது காற்றாக....

முதிர்கன்னி


ஒற்றை ம‌ர‌மாய் வாழ்க்கை

உன் நினைவு என்னும் காற்றில்

ஊஞ்ச‌லாட்ட‌ம் போடுகிற‌து.

சிட்டுக் குருவிக‌ளின் சிறையில் இருந்தாலும்

அத‌னுட‌ன் சிற‌க‌டித்து செல்ல‌ வாய்பில்லை.

என் நிழ‌ல் க‌ற்றைக‌ளின் ந‌டுவே

இளைப்பாறும் மான் கூட்ட‌த்தில்

குதித்தோடி சென்று சுதந்திர‌ம்

சுவாசிக்க‌ வ‌ழியில்லை.

என்னை சுற்றியிருக்கும் ஈர‌த்தை எல்லாம்

வேர்க‌ளின் வ‌ழியே உறிஞ்சிவிடினும்

ப‌ழ‌ங்க‌ளை ப‌ரிச‌ளிக்க‌ விழைகிறேன் எப்போழுதும்.

ப‌ழுத்த ம‌ரம் தான் க‌ல்ல‌டிப‌டும் என்ற‌

ப‌ழ‌மொழிக்குக்கூட‌ விதிவில‌க்கான‌வ‌ள்.

வ‌ருட‌ங்க‌ள் ம‌ட்டும் வ‌ழிவிட

வ‌ய‌தாகிப் போன‌வ‌ள்.

விழித்தெழு

விழி எங்கும் வீண்கவலை வித்திட்ட
கண்ணீர் முத்துகளை
வசந்த மாலையாக்கு

உழைப்பால் உயிர் கொண்டு
உதிர்ந்த‌ உன் விய‌ர்வையை
சூரிய‌க் கதிர் கொண்டு
வைர‌க்க‌ல் சாலையாக்கு

க‌ன்னிய‌மாய் க‌ரைபுர‌ண்டோடும்
உன் ர‌த்த‌த்தை க‌ரைப‌டிய‌விடாம‌ல்
க‌ல‌ங்க‌ரை விள‌க்காக்கு.

உன்னில் நீயே உருவாக்கிக்கொள்ள‌ முடியும்
உயர்ந்த‌ ம‌னித‌னை

உதார‌ணத்தை உல‌கில் தேடாதே
உன்னில் தேடு.

ஒர் ஏழையின் குரல்


நிறம் மாறும் நிமிடங்களின் நுழைவாயிலில்
சில ம‌னித‌ர்களின் நிஜ‌ங்கள்
நிழ‌லாகும் மர்ம‌ம் புரிய‌வில்லை.

க‌ட‌வுளின் நீதி எது...?
க‌ண்ணீரின் மீதி எது....?
எதுவும் ச‌ம‌ர்ப‌ண‌மாகும் ப‌ண‌த்திற்கு.

விலையில்லா வேண்டுகோளுக்கு
பூசாரிக்கூட‌ ச‌ம்ம‌திப்ப‌தில்லை.

க‌ண்ணாமூச்சி ஆடுவ‌து க‌ண்ண‌ன் அல்ல‌,
இங்கு ப‌ண‌த்தை பொதியாய் சும‌க்கும்
க‌ழுதைக‌ளின் கூட்ட‌ம் ம‌ட்டுமே...

இர‌ஞ்சுகிறேன் இனிய‌வை வேண்டுமென்று
வ‌ரைய‌றுக்கப்ப‌ட்ட‌ வாழ்க்கை என‌ அறியாம‌ல்.

நிவார‌ண‌ம் கோரி...கோரி...
நிச‌ப்த‌மான‌து நிமிட‌ங்க‌ள்

மொள‌ன‌த்திலும் மொழிக‌ள்
உண்டு என அறியாம‌ல்.

குளம்


நான் வற்றிப்போன குளமானது எப்போழுது...?

கல்லெறிந்தாய், தண்ணீர் மேலே வருமென்றா...?

வற்றிப்போக செய்துவிட்டு வயிற்றில் அடித்து என்ன பயன்...?

காய்ந்து கிடக்கும் என் நிலத்தில் சிறிய தவளையின் தேடல்

வழியை தேடியா....? விதியை தேடியா....?

என் மனசஞ்சலத்தின் வெளிப்பாடானது.

கட்டுண்டு கிடக்கும் கருவேலம்முள்ளும் என்னிடத்தில்,

எவரையும் காயப்படுத்த எண்ணாமல்.

க‌ற்க‌ண்டு சிரிப்பில் காகித‌ப்பூவும் என்னிட‌த்தில்

எவ‌ரையும் வ‌ர‌வேற்க‌ முடியாம‌ல்.

இவ்விர‌ண்டும் காலத்தின் அடியால் ம‌ரத்துக்கிட‌க்கும்

பாரங்க‌ற்க‌ளின் பாதுகாப்பில் எப்போழுதும் இணைபிரியாம‌ல்....

Monday, October 10, 2011

கிளை முறிந்த மரங்கள்
இந்த கவிதை, கவிதைப் போட்டிக்காக தேசிய ஒருமைப்பாட்டை
அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது.கண்டம் கண்டமாய் பிரித்தாளும் கொள்கையில்

பிரிந்த்தது நம் தேசமும்.

கேட்டது கிடைத்தது...ஆள்பவர்களுக்கு

நம் கூக்குரல் புதைந்தது பிளவுகளின் பள்ளத்தில்..

தனி மரம் தோப்பானது சுதந்திரம் வேண்டி

மரங்களின் தூளியில் துயில் கொண்ட நேரம்..

கிளை முறிந்த மரங்களாய் வீழ்ந்துதான் போனோம் வெற்றிக்குப் பிறகும்

சுதந்திர மயக்கத்தில் கிளை முறிந்த மரங்களை விட

கிளைகளை முறித்த மரமாய் ஆனோம்.

காதல் கிடங்கு


மழை விழுந்த ஈரத்தை இழுத்துக் கொள்ளும்
மண் தரைப்போல என்னுள் விழுகின்ற உன் அன்பு
போதாமல் இழுத்துக் கொள்கிறேன்.

பூக்களின் வண்ணங்களில் வாசம் செய்கிறாய்
அதனால் தானா வண்ணங்களுக்கும் வாசம் பிறக்கிறது.
வெறும் காகிதப்பூவிலும் கசங்கிய வாசம்
நீ சோகம் மீட்டும் போழுது.

பிரபஞ்சத்தைவிட மர்மமானது உன் புன்னகை
அதில் சுடும் சூரியனும் அடங்கும்
குளிர் நிலவும் அடங்கும்
கோடி நட்சத்திரங்களாய்,
உன் மன சஞ்சலங்களும் மின்னும்.

உன்னை நோக்கி எழும்பி
எட்டிவிட‌ துடிக்கும் என் ஆசை
ஒரு நிலையில் அட‌ங்கினாலும்
உருண்டோடி தேடி முடிக்கும் என் காத‌லை.

நீ இருந்து சென்ற‌ இட‌த்தின் தூசியைக்கூட‌
கைப்ப‌ற்ற நினைக்கும் குப்பைத் தொட்டி ம‌ன‌து.
ஆம் நீ தூக்கி எரிந்த‌ ப‌ல‌வ‌ற்றில்
என் இத‌ய‌மும் ஒன்று
இப்பொழுது உன் நினைவுக‌ளை
சேக‌ரிக்கும் கிட‌ங்கான‌து.

சிறைப்ப‌ட்ட ஓவியம்....

சாலையோர சிற்பங்கள் கூட
சுதந்திரம் அடைந்தவைதான்..

உன் வேலைப்பாடு நிறைந்த வேலியில்
என் உயிரோவியம்
வெறும் கண்ணாடிப் பதுமையாய்....

தாய்பாலுக்கு ஏங்கும் சிறு குழந்தையாய்
உன் ஒற்றைப் பார்வைக்கு காக்க வைத்தாய்.

பழையாதிகிவிட மாளிகையிலிருந்து
வெளியேற்றம் ‍‍‍‍_ உடைந்து விழுந்தாலும்
உற்சாகமாய் என் அதே புன்னகை
விடுதலையை நினைத்து......

விரிசல்...


நாளும் போராடுகிறேன்
என்னில் கலந்துவிட்ட உன் நினைவுகளுடன்
பழகிவிட்ட நினைவுகளை
பிரித்தெடுக்க முடியாமல் வலிக்கிறது இதயம்

வீட்டினுள் இருக்கும்
நிறைந்த குடத்திலிருந்து
ஒரு துளி நீரைக் கூட
பருக முடியாத காக்கையாய்
வெளியிருந்து தவிக்கிறது உள்ளம்

நிகழ்கால நிஜங்களும்
இறந்தகால நினைவுகளும்
போட்டியிட....
பட்டிமன்றமானது மனம்.

உன் இதய ஓரதில் எங்கேனும்
நான் இருந்தால்....
நான் உடலால் மரணித்த பிறகு
செப்பனிடு என் கல்லறையை

அதுவேனும் உன் இதயத்தைப் போல
விரிசல் விடாதிருக்கட்டும்......

Saturday, October 8, 2011

தனிமை


பாதையில் நடக்கவைக்கப்பட்டேன்
என் முன்னால் பூட்ஸின் ஓசை
‍சிறிது நேரத்தில், என் பின்னால்
தேய்ந்த செருப்பின் மேலும் ஒரு தேய்மானம்
இரண்டும் ஓய்ந்தது
தனியே என் பாதுகையின் பயணம்
மீண்டும் ஓசைகள் என் பக்கத்தில்
பைக்கின் பரவச ஓட்டம்,
என்‍‍‍‍‍‍‍ ஆகாயத்தை சற்றே கிழிக்க முயன்றவாறு
விமானத்தின் பிரம்மாண்ட வீரிடல்
அதுவும் ஓய்ந்தது ஒரு சில நிமிடங்களில்
மீண்டும் என் பாதுகையின்
பயணம். தனியாக... நிசப்தமாக...

தனிமை பிடித்தமானதாக இல்லை,
இப்பொழுது பழக்கமானது.

ஏக்கங்கள்


நிழலுருவின் நீண்ட பயணம்
ஏங்கித் தவிக்கும் மனங்களின் பிரதிபிம்பங்கள்

கை குழந்தையில் ஆரம்பித்து
கரையேற‌த் துடிக்கும் மனங்களிலும்
மிதமிஞ்சி மிதக்கும் ஏக்கங்கள்

கொம்பூன்றி தள்ளாடும் வயோதிகத்திலும்
நீங்காமல் நிமிர்ந்து நிற்கும் ஏக்கங்கள்

காலை முதல் மாலை வரை
கம்பிக்கு நடுவே வாழ்க்கையை எண்ணும் போதும்
கைதிக்குள் கரைந்து மிஞ்சும் ஏக்கங்கள்

கையேடின் பக்கம் நிரம்பி
மையெல்லாம் தீர்ந்த பின்னும்
தீராத முடிவாய் தொடரும் ஏக்கங்கள்

எண்ணச் சிதற‌ல்களில்
சிதறிக்கிடக்கும் சில்லுக்களில் சிரிக்கும் ஏக்கங்கள்

அடிக்க அடிக்க எழும்பும் பந்தாய்
மனதை முட்டி மோதும் ஏக்கங்கள்

சூரிய கதிரில் மலர்ந்தாலும்
நிலவொளியில் குளிர்ந்தாலும்
இறுகிய இருட்டிற்கு இழுத்துச் செல்லும் ஏக்கங்கள்

நியாயத்திற்கும் அநியாயத்திற்கும் நடுவே
நூல் அளவு இடைவெளியில்
கழைக்கூத்தாடியாக்கிவைக்கும் ஏக்கங்கள்

ஏக்கங்களின் முடிவு பக்கங்களை
தேடுகிறேன் ஏக்கமுடன்.....!

Saturday, October 1, 2011

மறந்து போனேன் மறுத்துத்தான் போனேன்....


மறந்து போனேன் மறுத்துத்தான் போனேன்....
உன்னை நினைக்க அல்ல
உன் நினைவுகளை....

பேச மறந்த வார்த்தைகளும்,
மறுத்த மொளன சாதிப்புகளும்
அவரவர் நியாயங்களை நிரப்ப முடியாமல் போனது அசந்தர்பமாக.

காலம் கடந்த ஞாயாபகமாய்
என் விழியோரத்தில் உன் நினைவுத்துளிகள்
கண்ணீராக.

என் வாசலில் உன்னை வரவேற்று
என்றோ போட்ட கோலம் இன்று சிரிக்கிறது
என்னை பார்த்து அலங்கோலமாக.

என் இதயத்தில் உன் நினைவுகள்
திரைசீலையின் நைந்த மடிப்புகளின்
கிழிசல்களாக.

கை நிரைத்த வளையல்கள்
கண்ணாடித்துண்டாய் கையை கிழிக்க,
மனம் நிறைந்த வாழ்கையில்
மனதை கிழித்தாய் எளிதாக.

இவையெல்லாம் உன் பிரிவில்
நான் வாழும் வாழ்கையின் உதாரணங்கள்
பிடிப்பில்லாமல் அல்ல பிணமாக.