Thursday, December 8, 2011

ஷேர் ஆட்டோ




பாஸ்கரன் அன்றும் பரபரப்பாக கிளம்பிவிட்டான். இப்போ போய் ஆட்டோ பிடித்தால் தான் சரியாக இருக்கும் இந்த டிராஃபிக் ஜாமில் மாட்டிக்கிட்டு 10 நிமிஷத்தில் போகவேண்டிய ஆபிஸ்க்கு 45 நிமிஷம் ஆகிறது. சரி இன்னும் எத்தனை நாள்னு பார்ப்போம். என எண்ணியவாரே வீட்டிலிருந்து கிளம்பிவிட்டான். அவசரமாக வந்தவன் பஸ் நிறுத்தத்திற்கு வந்த 3 ஆட்டோக்களையும் விட்டுவிட்டு அடுத்த ஆட்டோ...அடுத்த ஆட்டோ என பார்த்துகொண்டிருந்தான். அவனது நன்பன் ஷாம் பைக்கில் கிராஸ் செய்ய ஹாய் டா என கூறி மீண்டும் கர்மசிரத்தையாக அடுத்த ஆட்டோவை பார்வையுற்றான்.

ஷியமே அருகில் வந்து “ என்னடா இது அநியாயம், நானும் 10 நாளா பாக்கறேன் உன் வண்டிய என் கிட்ட கொடுத்துட்டு நீ ஷேர் அட்டோ பிடிச்சு ஆபிஸ் வர, இதில் சில நேரம் லேட் ஆகி மெனேஜரிடம் திட்டுவேற வாங்கற. போறும்டா இந்த கண்ட்றாவி வேலையெல்லாம். என் கூட இன்னைக்கு நீ வர. எனவும் பாஸ்கர் ஏதோ சொல்ல வாயேடுக்க, ஷியாம் “ஒன்னும் பேசாதே, வா போகலாம், எனவும் ஷேர் ஆட்டோவரவும் சரியாக இருந்த்து. அதை ஒரு நிமிடம் உற்று பார்த்ததும் ஷாயாமிற்கு பதிலேதும் சொல்லாமல் ஏற சென்றான்.

ஷேர் ஆட்டோவை ஒரு அலசு அலசினான் ஷியாம் ஒரு முருகர் படம், ஒரு ஆளின் புகைபடம் அதற்கு ஒரு மாலை. ஒரு வேளை பெண் யாரையாவது நினைத்து சுத்துகிறானோ எண்ணி வண்டியை நோட்டமிட்டான். வண்டியில் யாரும் இல்லை. சிறிது நேரம் நின்றுவிட்டு சென்றது அந்த ஷேர் ஆட்டோ. ஒன்றும் புரியாமல் விழித்துவிட்டு அவனும் பைக்கை கிளப்பினான்.

மதிய உணவு இடைவேளையில் பொறுக்கமுடியாமல் ஷியாமே பாஸ்கரிடம் சென்று கேட்டுவிட்டான். அதற்கு சிரித்துக்கொண்டே பாஸ்கர், “ தேவையில்லாம தப்பு தப்பா யோசிக்காதேடா, நான் ஒரு நல்ல எண்ணத்தோடதான் அந்த ஷேர் ஆட்டோவில் வருகிறேன்.
நான் ஒரு நாள் வண்டி சர்வீஸ் விட்டதால் ஷேர் ஆட்டோவில் வருவதாக ஆகிவிட்டது. அப்போது பார்த்து நிறைய ஆட்டோக்கள் வந்தனவே ஒழிய காலியாகவோ சிறிது இடத்துடனோகூட வரவில்லை. எல்லாவற்றிலும் கூட்டம் நிறம்பிவழிந்தது.
என்ன செய்ய ஆபிஸிற்கு டயம் ஆகிவிட்டதே என நினைத்துக்கொண்டிருந்த போதுதான் இந்த ஷேர் ஆட்டோ வந்து நின்றது அதுவும் காலியாக. என்ன ஆச்சர்யம் என சந்தோஷத்துடன் ஏறி அமர்ந்தேன்.

சிறிது நேரம் நின்று காத்திருந்த ஆட்டோவை டயம் ஆனதால் சீக்கிரம் போகச்சொல்லி கூறினேன். ”சரி தம்பி இப்போ கிளம்பிடறேன்”, என எனக்கு பதிலளித்தவர் திரும்பி என்னை பார்த்து முறுவலித்தார். எனக்கு ஆச்சர்யமாகவும் சிறிது அதிர்ச்சியாகவும் கூட இருந்தது. ஏனேன்றால் வண்டியை ஓட்டியவர் ஒரு மூதாட்டி. 60 வயதுக்கு மேல் மதிக்கத்தக்க ஒரு வயதான பாட்டி ஷேர் ஆட்டோ ஓட்டுகிறாரா என அதிர்ந்துதான் போனேன்.

நான் இறங்கும் வரை ஒருவர் கூட ஏறாமல் இந்த ஆட்டோவை தவிர்த்துவந்தனர். அவரிடன் வந்த்திற்கான காசை கொடுத்துவிட்டு அன்று ஆலுவலகம் வந்தடைந்தேன்.அன்று முழுவதும் அந்த பாட்டியின் நினைவு இருந்துகொண்ட்டே இருந்த்து எனக்கு. எனது பைக் வர மேலும் ஒரு நாள் ஆகலாம் என கூறினான் மெகானிக். சரியென அன்று மாலை திரும்பவும் ஷேர் ஆட்டோவிற்காக காத்திருக்கையில் ஏனோ அவரை பார்க்கவேண்டும் போல இருந்த்து. மற்ற வண்டிகளை வேண்டுமென்றேன் தவறவிட்டு இவருக்காக காத்திருந்தேன். அவரும் வந்தார் சிரித்த முகத்துடன் என்னை அடையாளம் கண்டு கொண்டு வரவேற்றார். நானும் முன் இருக்கையில் சென்று அமர்ந்து அவரிடம் மெல்ல பேச்சு கொடுக்க ஆரம்பித்தேன்.

“தம்பி, என் வயசு 63 ஆகுது, என் வீட்டுக்காரன் ஒரு ஆட்டோ டிரைவர், ஷேர் ஆட்டோவும் வாங்கி ஓட்டிகிட்டு இருந்தார். நாங்க இரண்டு பேரும் காதலித்து கல்யாணம் செஞ்சுகிட்டவங்க, நல்ல முறைல வாழ்ந்தோம். இப்போ ஒரு 6 மாசத்துக்கு முன்னாடி, ஹார்ட் அட்டாக்குல அவர் இறந்துட்டார். எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியலை, என்னோட பெண் காலேஜ் முடிக்க போறா.காசுக்கு என்ன பண்ணறதுன்னு தெரியாம இருக்கும் போதுதான், அவர் காதலோட சின்ன வயசுல ஆட்டோ ஓட்ட கத்துகொடுத்தார் லைசன்சும் வாங்கி நானும் ஆட்டோ ஓட்டினேன். அவருக்கு முடியாத சமயத்துல நான் தான் சவாரிக்கு போவேன். ஆனா இப்போ எனக்கு வயசு ஆயிடுச்சு என்னால ஓட்ட முடியாது ஏதாவது ஆக்ஸிடெண்ட் பண்ணிடுவேன்னு நினைச்சு யாரும் இதிலே ஏறமாட்டேங்கறாங்க தம்பி.

எனக்கும் ஆட்டோ ஓட்டி அனுபவம் இருக்குன்னு சொன்னாலும் எத்தனை பேர்க்கிட்ட என்னால சொல்லிகிட்டே இருக்கமுடியும் அதுவும் இங்க ஷேர் ஆட்டோன்னா ரொம்ப டிமாண்ட், சாதாரண ஆட்டோவில் போவதை தவிர்த்து இப்போ எல்லோரும் ஷேர் ஆட்டோல தான் போக விரும்பறாங்க. சரி இதை ஓட்டி காலத்தையும் ஓட்டிடலாம்னு வந்தா, இங்க ஷேர் ஆட்டோ சங்ககாரங்க ஏதோ இளைக்காரமா பார்க்கறாங்க. என்ன செய்ய தம்பி உன்ன மாதிரி உள்ள நல்லபுள்ளைங்கதான் எப்பவாச்சும் அவசரம், மத்த ஆட்டோவில் இடம் இல்லைனா ஏறுதுங்க. மத்தபடி என் மேல நம்பிக்கை வச்சு ஒருத்தரும் ஏற மாட்டேங்கறாங்க தம்பி”,என கூறும் போதே அந்த வயதான புதுமைப்பெண்ணின் கண்ணிலும் கண்ணீர் திரண்டது ஆற்றாமையால்.

“அதாண்ட நான் ஒவ்வோருநாளும் அவங்களுக்கு சின்ன உதவியா இருக்கட்டுமேன்னு அவங்க ஆட்டோவில போறேன். இப்போ இரண்டு ஸ்டாப் தள்ளி இரண்டு பொண்ணுங்க ஏற ஆரம்பிச்சுருக்காங்க. வரும்போது ஒரு பெரியவர், வருகிறார். அப்படியே கொஞ்சம் ஆட்கள் வர ஆரம்பிச்சாங்கன்னா. மத்தவங்களும் இவங்களை பார்த்து பார்த்து தைரியமா இந்த ஆட்டோவில வருவாங்க. அதுக்குத்தான் இந்த முயற்சி. இன்னும் 10, 15 நாள் தான்...என்னோட இந்த சின்ன சேவை எனக்கு மனநிறைவை தருதுடா”, என்ற பாஸ்கரிடம் நானும் வருகிறேன் என்பது போல் ”கோபால் இந்தா பைக் கீ, நானும் பாஸ்க்கரும் ஒன்னா ஷேர் ஆட்டோவில் வருவோம் ரூமுக்கு வந்து கொடு,என்றான் ஷியாம். புரியாத கோபால் தன் காதலியுடன் சவாரிக்காக சந்தோஷமாக ஏற்றுக்கொண்டான் இந்த கடமையை.

2 comments:

  1. ஆஹா வசு சூப்பர் கதை ஷேர் ஆட்டோ...

    வித்தியாசமா சிந்திக்கற...

    பாராட்டுகள்...

    ReplyDelete
  2. பாராட்டிற்கு நன்றி ஹேமா!

    ReplyDelete